

மேற்குவங்க மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
“கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்கத்தில் 3-வது கட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணிகள் முடிந்த பிறகு, லோதானா கிராமத்தைச் சேர்ந்த ஷேக் பாஸில் ஹக் மற்றும் துகிராம் தால் ஆகிய இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆயுதம் தாங்கிய கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுரவ் சர்மா தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, தாஹிதுல் மண்டல் என்ற மார்க்சிஸ்ட் தொண்டர் தேர்தலின்போது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். தற்போது மேலும் 2 மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளுக்குப் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாலர் சூர்ய காந்த மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், திரிணமூல் தரப்பில் இதை மறுத்துள்ளனர்.
“மற்ற மாநிலங்களைப் போல் அல்லாது, மேற்குவங்கத்தில் மட்டும் தேர்தலின்போது எத்தனை பேர் கொல்லப்பட்டனர், எத்தனை பேர் தாக்கப்பட்டனர். எத்தனை வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன என்பதுதான் செய்தியாக இருக் கிறது” என பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியது குறிப்பிடத்தக்கது.