Published : 27 Feb 2022 07:05 AM
Last Updated : 27 Feb 2022 07:05 AM

உலகம் முழுவதும் ஆயுஷ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது: பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி

மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று 5-வது வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மத்திய அமைச்சர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், பொது மக்கள், தனியார் நிறுவன பிரதிநிதிகள், செவிலியர்கள், சுகாதார, தொழில்நுட்ப, ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். படம்: பிடிஐ

புதுடெல்லி

மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று 5-வது வெபினார் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மத்திய அமைச்சர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், பொது மக்கள், தனியார் நிறுவன பிரதிநிதிகள், செவிலியர்கள், சுகாதார, தொழில்நுட்ப, ஆராய்ச்சி யாளர் கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி யில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டு மக்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லா மல், அனைவருக்கும் அதை சமமானதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். மத்திய அரசு கொண்டு வந்த ஆயுஷ் திட்டம் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவற்றை உலக அளவில் ஏற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும், சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையத்தை உலக சுகாதார நிறுவனம் விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ளது. கரோனா தொற்று பரவிய போது, தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கும் மருத்துவ உதவி, ஆலோசனைகள் கிடைக்கும் வகையில், டெலி மெடிசின்உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது ஆளில்லா ட்ரோன் தொழில்நுட்பத்தை மருத்துவ பயன்பாட்டுக்காக மேம்படுத்த வேண்டும். நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக சுகாதாரத் துறையை சீர்திருத்தம் செய்து மக்களுக்கு முழு அளவில் பயன்தரும் வகையில் மேம்படுத்தி வருகிறோம்.

தற்காலத்துக்கு ஏற்ற வகையில், மருத்துவ அறிவியல் சார்ந்த உட்கட்டமைப்புகள் மேம்படுத்தல், மனித வளம், ஆயுஷ் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தல் போன்றவற்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவ வசதி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு வட்டார, மாவட்ட அளவில் கிராமங்களுக்கு அருகில் தீவிர சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதை செயல்படுத்த தனியார் துறையினரும் மற்ற துறையினரும் முன்வர வேண்டும்.

மருத்துவ சேவைக்கு தேவை அதிகரித்து வருவதை கருதி, மருத்துவ நிபுணர்களின் எண் ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சித்து வருகிறோம். மருத்துவக் கல்வி மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப் படுகிறது. ‘கோவின்’ மற்றும் ‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்’ ஆகிய திட்டங்கள், நுகர்வோர் - சுகாதார துறையில் சேவை வழங்குவோர் என இரு தரப்பினரும் எளிதாக தொடர்பு கொள்வதற்கு வழி வகுத்துள்ளது. இதன்மூலம் மக்கள் எளிதாக சிகிச்சை பெறவும் மருத்துவ துறையினர் எளிதாக சிகிச்சை அளிக்கவும் முடிகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சில மாநிலங்களில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 இலக்க சுகாதார எண் (ஹெல்த் ஐ.டி.) வழங்கப்படும். இதை ஆதார் மற்றும் மொபைல் எண் உதவியுடன் இதற்கான இணையதளத்தில் பதிவு செய்து சுகாதார அடையாள எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த எண் மூலம் ஒருவரின் மருத்துவ தகவல்களை ஆண்டு கணக்கில் பாதுகாக்க பயன்படும்.

இதன் மூலம் என்னென்ன பிரச்சினைகளுக்கு என்னென்ன சிகிச்சை எப்போதெல்லாம் எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவற்றின் மூலம் எங்கு சென்றாலும், இந்த தகவல்களை இணையதளத்தில் பார்த்து எதிர்காலத்தில் உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதாக சிகிச்சை பெற முடியும். பழைய மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்களை பாதுகாக்கவோ அல்லது ஒவ்வொரு முறை சிகிச்சை பெறும் போது எடுத்துச் செல்லவோ தேவை இருக்காது. தற்போது இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதுகுறித்து பொருளாதார விவகாரத்துக்கான கேபினட் கமிட்டி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த, பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இத்திட்டம் ரூ.1,600 கோடியில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இதை தேசிய சுகாதார ஆணையம் அமல்படுத்தும்’’ என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x