

லத்தூர் மாவட்டத்துக்கு குடிநீர் ரயில் அனுப்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தமைக்காக பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள லத்தூருக்கு திங்கள்கிழமை 10 வேகன்கள் கொண்ட குடிநீர் ரயில் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், "லத்தூர் மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து மத்திய அரசு குடிதண்ணீர் ரயிலை அனுப்பியுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை. இந்த 21-ம் நூற்றாண்டில் தண்ணீர் தட்டுப்பாட்டால் யாராவது உயிரிழக்க நேர்ந்தால் அது தேசத்துக்கே அவமானம். எனவே லத்தூர் மக்களுக்கு உதவுவது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். லத்தூர் மக்களுக்கு உதவ டெல்லி அரசும் தயாராக இருக்கிறது.
தேவைப்பட்டால் நீங்கள் மற்ற அண்டை மாநில முதல்வர்களுக்கும் லத்தூருக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கலாம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.