வாழ வேண்டும்.. என்னை விட்டு விடுங்கள்: குஜராத் வன்முறையால் பாதிக்கப்பட்ட அன்சாரி கெஞ்சல்

வாழ வேண்டும்.. என்னை விட்டு விடுங்கள்: குஜராத் வன்முறையால் பாதிக்கப்பட்ட அன்சாரி கெஞ்சல்
Updated on
2 min read

குஜராத் வன்முறையின்போது கண்களில் நீர் தளும்ப இரு கரங் களையும் கூப்பி, உயிருக்கு மன்றாடும் குதுப்புதீன் அன்சாரியின் புகைப்படம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அப்போது அவரின் வயது 29.

14 ஆண்டுகளுக்கு முன் மன்றாடி யதைப் போலவே இப்போதும் மன்றாடுகிறார் குதுப்புதீன் அன்சாரி. அசாம், மேற்குவங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு அன்சாரியின் புகைப்படங் கள் சுவரொட்டிகளாக ஒட்டப்பட் டுள்ளன. அந்த சுவரொட்டிகளில், “மோடியின் குஜராத் என்றால் வளர்ச்சி என்று பொருளா? அசாம் இன்னொரு குஜராத்தாக மாற வேண்டுமா?” என்பன போன்ற வாசகங்கள் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

“கடந்த 14 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளாலும், இந்தி திரையுலகத்தாலும், ஏன் தீவிரவாத அமைப்புகளாலும் கூட நான் ‘உப யோகிக்கப்பட்டேன்’ தவறாக பயன் படுத்திக் கொள்ளப்பட்டேன். என் குழந்தைகள் ‘அப்பா, எப்போது உன் புகைப்படத்தைப் பார்த்தாலும் நீங்கள் ஏன் அழுதுகொண்டும், மன்றாடிக் கொண்டும் இருக்கிறீர் கள்’ எனக் கேட்கும்போது, அதற்குப் பதில் சொல்ல முடியாமல், வன் முறையின்போதே இறந்திருக்க லாம் என விரும்புகிறேன்.”

பிர்ஜுனூரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அந்த ஒண்டுக் குடித்தனப் பகுதியில் சிறிய அறையில் அமர்ந்தபடி பேசுகிறார் அன்சாரி. அவர் தையல்காரராக பணிபுரிகிறார். “நான் குஜராத்தில் வாழ விரும்புகிறேன். அமைதியாக வாழ விரும்புகிறேன்.” என்கிறார் அன்சாரி.

அன்சாரி மன்றாடும் அந்த பிரசித்திபெற்ற புகைப்படத்தை எடுத்தவர் அர்கோ தத்தா. வன்முறைச் சம்பவத்தின்போது, அன்சாரி நரோடா பாட்டியா அருகே வசித்து வந்தார்.

வாளைக் கையில் ஏந்தியபடி வெறிக்கூச்சலிட்டு வந்த ஒரு கும்பல் எதிர்ப்படும் முஸ்லிம்களை கொன்று குவித்தது. தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து கதவிடுக்கு வழியாக, அதிவிரைவுப் படை செல்வதைப் பார்த்தார். அதிவிரைவுப் படையைப் பார்த்து, தன் உயிரைக் காக்கும்படி அவர் கைகூப்பியபடி கெஞ்சியதை, அர்கோ தத்தா புகைப்படமாக பதிவு செய்தார். மத்தியப் படையினர் அன்சாரியைக் காப்பாற்றினர்.

அந்தப் புகைப்படம், குஜராத் வன்முறையின் தவிர்க்க முடியாத அடையாளச் சின்னமாக மாறிப் போனது.

“அந்தப் புகைப்படம் எனக்கு வாழ்க்கையைத் தந்தது. அப்போது, அதிவிரைவுப் படையுடன் ஊடகத்தினர் பயணித்தனர். அதனால், காவலர்களால் என்னைப் புறக்கணிக்க முடியாமல் போயிருக்கலாம். என்னை அவர்கள் பாதுகாத்தனர். ஆனால், அந்தப் புகைப்படம் என் வாழ்க்கையின் எஞ்சிய எல்லாவற்றையும் பாதித்தது. என் வேலையை இழந்தேன். மன அமைதியை இழந்தேன். அடிப்படை வாத இந்துக்கள் என்னை அடை யாளம் கண்டுபிடித்து, குறி வைத்தனர். இப்போது அரசியல் கட்சிகள் என்னையும் என் புகைப் படத்தையும் என் அனுமதியின்றி பயன்படுத்த முயல்கின்றனர்” என்றார்.

மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலின்போது இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் குரானுடன் அன்சாரியின் புகைப் படத்தையும் இணைத்து பயன்படுத் தினர். குஜராத் வன்முறைக்கு பழி வாங்கவே அத்தாக்குதல் எனக் காட்டுவதற்கு அவ்வாறு பயன் படுத்தினர். “நான் இதற்காக பணம் பெறுவதாக சிலர் (பாஜகவை மறைமுகமாக சுட்டுகிறார்) குற்றம்சாட்டுகின்றனர்”.

“சில இந்துக்கள் கைகூப்பி மன்னிப்புக் கோருகின்றனர். எனக்கு மதத்துக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். எனது இப்போதைய முதலாளி ஓர் இந்து. அவர் என் நிலையைப் புரிந்துகொண்டிருக்கிறார். ” எனத் தெரிவித்துள்ளார் அன்சாரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in