Published : 23 Jun 2014 08:14 PM
Last Updated : 23 Jun 2014 08:14 PM

மக்கள் விரோத மசோதாக்களை முறியடிப்போம்: காங்கிரஸ் உறுதி

மத்தியில் உள்ள பாஜக அரசு மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்ற முயற்சித்தால், அதை மாநிலங்களவையில் முறியடிப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: “மாநிலங்களவையில் எங்களுக்கு போதிய எண்ணிக்கையில் எம்.பி.க்கள் உள்ளனர். மக்கள் நலனுக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய, சர்வாதிகாரத்தன்மையுடன் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் மசோதாக்களை பிற கட்சிகளுடன் இணைந்து முறியடிப்போம்.

மாநிலங்களவையில் பெரும்பான்மையை பெற, பிராந்திய கட்சிகளின் உதவியை பாஜக நாடியுள்ளது. இந்த முயற்சியை நாங்கள் முறியடிப்போம்.

குறிப்பாக அதிமுகவின் ஆதரவை பாஜக கோரியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாஜகவின் தந்திரத்துக்கு பலியாக மாட்டார். அவர் மிகவும் அனுபவமிக்கவர். பல தரப்பட்ட குணங்களைக் கொண்ட பிரதமர்களுடன் பணியாற்றியவர்.

சிறிய அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, அதன் ஒரு மாத கால செயல்பாட்டை வைத்து பார்க்கும்போது அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் குவித்து வைத்திருப்பதற்குத்தான் என்று தெரிகிறது.” என்றார்.

மாநிலங்களவையில் வரும் ஜூலை மாதம் ரயில்வே, பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் – 67, இடதுசாரிக் கட்சிகள் – 11, சமாஜ்வாதி – 9, பகுஜன் சமாஜ் – 14 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கட்சிகளுடன் மேலும் சில கட்சிகள் சேர்ந்து பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x