

லாலு பிரசாத் யாதவிற்கு போட்டியாக அவரது மைத்துனர் சாது யாதவ் தன் மகளையும் முலாயம் சிங் யாதவின் மற்றொரு பேரனுக்கு திருமணம் செய்து கொடுக்க இருக்கிறார். இதன் நிச்சயதார்தத்திற்கு லாலுவுடன் சேர்த்து அக்கா ராப்ரி தேவியையும் அழைக்கப்படவில்லை.
பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆட்சியின் போது லாலுவால் அரசியலுக்கு வந்தவர்கள் அவருடைய மைத்துனர்கள் சாது யாதவ் மற்றும் சுபாஷ் யாதவ். இதில், சாதுவை சட்டசபையிலும், சுபாஷை மேலவையிலும் லாலு உறுப்பினர் ஆக்கினார். பிறகு, இருவரது தலையீடும் சகோதரி ராப்ரியின் ஆட்சியில் அதிகமாக இருந்ததன் காரணமாக கட்சிக்கு களங்கம் உருவானது.
எனினும், சுபாஷ் யாதவை மாநிலங்களைவைக்கும், சாது யாதவை மக்களவைக்கும் 2004-ல் அனுப்பினார் லாலு. ஆனால், 2009-ல் மீண்டும் கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் சாது, காங்கிரசில் இணைந்து போட்டியிட்டு தோற்றார். 2010-ல் நடந்த பிஹார் சட்டசபை தேர்தலிலும் சாதுவிற்கு தோல்வியே.
சுபாஷ் யாதவ், எந்தக் கட்சியிலும் சேராமல் அமைதியாகவே இருக்கிறார். ஆனால், அப்போது முதல் லாலுவிற்கு போட்டியாக மைத்துனர் சாது பல விஷயங்களில் தலையிட்டு வருகிறார்.
இந்நிலையில், உ.பி.யை ஆளும் கட்சியான சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் பேரனான தேஜ் பிரதாப் யாதவுடன், லாலுவின் கடைசி மகள் ராஜலட்சுமியின் திருமணம் கடந்த வருடம் நடைபெற்றது. தற்போது, இதே குடும்பத்தில் முலாயம் சிங்கின் மற்றொரு பேரனான ராகுல் யாதவிற்கு, சாது யாதவ் தம் இரண்டாவது மகள் இஷாவை திருமணம் செய்து வைக்க உள்ளார். ராகுல் யாதவ் - இஷா நிச்சயதார்த்தம் கடந்த வாரம் பிப்ரவரி 26-ல் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு லாலு மற்றும் ராப்ரி குடும்பத்தினர் எவரும் அழைக்கப்படவில்லை என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த லாலு, ‘எனக்கு அழைப்பு வராமல் எப்படி கலந்து கொள்ள முடியும்? அவர், பல வருடங்களாக என்னுடன் பேசுவதும் இல்லை. அழைப்பு இல்லை எனில் திருமணத்திற்கும் நான் செல்ல வாய்ப்பில்லை. ஆனால், அவரது மகளான இஷாவிற்கு எங்கள் ஆசியும், அன்பும் உண்டு.’ என கூறியுள்ளார்.
இஷா மற்றும் ராகுல் டெல்லியின் அருகிலுள்ள நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனர். இவர்களின் திருமணம் முலாயமின் சொந்த ஊரான உ.பி.யின் எட்டவாவில் விமரிசையாக நடைபெற உள்ளது.