

விடுப்பு பயணச் சலுகை (எல்.டி.சி) மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள் 6 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
எம்.பி.க்களுக்கு விடுப்பு பயணச் சலுகை (எல்.டி.சி) மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்கள் விமானப் பயணச் சீட்டை ஒப்படைத்து விண்ணப்பித்தால், அவர்களுக்கு பயணச் சீட்டில் உள்ள கட்டணம் வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்தி, விமானத்தில் பயணம் செய்யாமலே போலி பயணச் சீட்டை ஒப்படைத்து எம்.பி.க்கள் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில், டிராவல் ஏஜென்சியை சேர்ந்த ஒருவர் ஏர் இந்தியா ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளிடம் சிக்கினார். விமானத்தில் பயணம் மேற் கொள்பவர்களுக்கு மட்டுமே வழங்கப் படும் 600 பயணச் சீட்டுகள் (போர்டிங் பாஸ்) அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. அதில் பயணியின் பெயர் இல்லாமல் காலியாக இருந்ததையடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
அப்போது, ரூ.9.5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை எம்.பி. அனில் குமார் சஹானி, ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை ஏஜென்ட் ருபைனா அக்தர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த டிராவல் ஏஜென்சி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
விசாரணையில், எம்.பி.க்கள் பண்டோபாத்யாயா (திரிணமூல் காங்கிரஸ்), பிரஜேஷ் பதக் (பகுஜன் சமாஜ்), லால்மிங் லியானா (மிசோரம் தேசிய முன்னணி), முன்னாள் எம்.பி.க்கள் ஜே.பி.என்.சிங் (பாஜக), மஹமூத் மதானி (ராஷ்ட்ரிய லோக்தளம்), ரேணு பிரதான் (பிஜு ஜனதா தளம்) ஆகிய 6 பேர் மீது சிபிஐ வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசின் விமானப் பயணச் சலுகையை மோசடியாக பெற்றதாக இவர்கள் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எம்.பி.க்களின் அலுவலகம், வீடு, டெல்லி மற்றும் ஒடிசாவில் உள்ள டிராவல் ஏஜென்சியின் அலுவலகங்கள் என 10 இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.
இந்த வழக்கு குறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஓ பிரையன் கூறுகையில், “டிராவல் ஏஜென்சிகளின் மோசடி தான் இது. எங்கள் கட்சி எம்.பி. தவறு செய்திருக்க மாட்டார். டிராவல் ஏஜென்சிகளின் இந்த முறைகேட்டை வெளியில் கொண்டுவர, எங்கள் கட்சி முழுமையாக ஒத்துழைக்கும்” என்றார்.