Published : 23 Feb 2022 09:27 PM
Last Updated : 23 Feb 2022 09:27 PM

தாவூத் தொடர்பு, பண மோசடி? - மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கைது பின்னணி

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாகவும், மகாராஷ்டிர சிறுபான்மை விவகார அமைச்சராகவும் இருந்த நவாப் மாலிக் இன்று அமலாக்க துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை முதல் 6 மணிநேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட அவர், செய்தியாளர்களைச் சந்தித்ததும் கையை தூக்கி, "நான் இதற்கு தலை வணங்க மாட்டேன். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். அனைவரையும் அம்பலப்படுத்துவோம்" என்று கூறினார். பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதும், "நான் வலுக்கட்டாயமாக இங்கு அழைத்து வரப்பட்டேன். விசாரணைக்கு முதலில் சம்மன் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அந்த நடைமுறைகளை பின்பற்றாமல் என்னை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்" என்று நீதிபதி முன் புகார் தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட இரண்டாவது மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக். முன்னதாக, முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

நவாப் மாலிக் கைது ஏன்?

தேசிய புலனாய்வு அமைப்பான NIA சமீபத்தில் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புதிய வழக்கை தொடுத்ததுடன் அவர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது. இதே வழக்கில் தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்கர், சகோதரி ஹசீனா பார்கரின் மகன் எனப் பலரை காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணையில், மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், தென்மும்பையில் ரியல் எஸ்டேட் விற்பனை செய்தது போன்றவற்றில் கிடைத்த பணம் தாவூத் இப்ராஹிமுக்கு ஹவாலா முறையில் அனுப்பப்பட்டு இருப்பதை கண்டுபிடித்த NIA, இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்திக்கிறோம் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புதிய டுவிஸ்ட்டாக இன்று காலை 6 மணிக்கே நவாப் மாலிக் வீட்டை முற்றுகையிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை வீட்டில் வைத்தே ஒரு மணிநேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்னரே அவரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டுசென்று விசாரணை செய்தனர். நவாப் மாலிக், பல ஆண்டுகளுக்கு முன்பு தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரின் கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. அந்த நேரத்தில் பெண்டி பஜார் பகுதியில் தாவூத் கூட்டாளிகளிடம் இருந்து பல ஏக்கர் நிலம் ஒன்றினை நவாப் மாலிக் பண மோசடி செய்து வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த அடிப்படையிலேயே அவர் விசாரணை செய்யப்பட்டுள்ளார். ஆனால் விசாரணையில் சரியான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை எனக் கூறி இறுதியாக அவரை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. நவாப் மாலிக் சமீப காலங்களில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். குறிப்பாக, அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக மிரட்டுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே தொடர்பாக பல புகார்களையும் அடுக்கி சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து இந்த கைது நடந்துள்ளது.

கைதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்வாரா என்பது குறித்து பேசியுள்ள மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பால், "நவாப் மாலிக் ராஜினாமா செய்ய மாட்டார். கடந்த 30 ஆண்டுகளில், மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக நவாப் மாலிக்கின் பெயரை யாரும் எடுக்கவில்லை, ஆனால் இப்போது அவர் மத்திய அரசுக்கு எதிராகப் பேசுகிறார் என்பதற்காக அவரை அடக்க நினைக்கிறார்கள். அவரின் கைதை எதிர்த்து மந்த்ராலயாவுக்கு முன்பாக உள்ள மகாத்மா காந்தி நினைவிடம் அருகே நாளை அமைதிப் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் சரத் பவார், "ஒருவர் மீதான நற்பெயரை கெடுக்க வசதியான வழி, அவரை தாவூத்துடன் இணைத்து பேசுவது. நவாப் மீதான வழக்கு பற்றி எனக்குத் தெரியாது. நான் முதலமைச்சராக இருந்தபோதும் தாவூத்துடன் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே தந்திரம் நவாப்பை அவதூறு செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது" என்றுள்ளார். மகாராஷ்ட்ர மாநிலத்தில் இந்த கைது விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x