Last Updated : 23 Feb, 2022 01:24 PM

 

Published : 23 Feb 2022 01:24 PM
Last Updated : 23 Feb 2022 01:24 PM

உ.பி. தேர்தல் களம்: ’அவத்’ பிரதேச தொகுதிகள் அதிமுக்கியத்துவம் பெறுவதன் பின்புலம்

பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள தலைநகர் லக்னோவின் தொகுதிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் 59 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று (பிப்.23) நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முகலாயர்கள் உள்ளிட்ட மன்னர்களின் ஆட்சியில் இந்த அவத் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. அதேபோல், இந்த காலத்திலும் அவத் பகுதியின் தொகுதிகளில் இருந்து தான் நாட்டின் அதிகமான பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி.பி.சிங், ராஜீவ் காந்தி, அட்டல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் அப்பட்டியலில் உள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 9 மாவட்டங்களில் லக்னோ, ராய்பரேலி, லக்கிம்பூர்கேரி, பிலிபித், சீதாபூர், ஹர்தோய், உன்னாவ், பதேபூர் மற்றும் பாந்தா இடம் பெற்றுள்ளன.

பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி
பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி

இவற்றில் 8 மாவட்டங்களும் அவத்தின் பெரும்பாலான பகுதியில் அமைந்துள்ளன. ஒரே ஒரு மாவட்டமாக பாந்தா மட்டும் உத்தரப் பிரதேசத்தின் வறட்சிப் பகுதியான புந்தேல்கண்டில் அமைந்துள்ளது. இந்த 9 மாவட்டங்களில் 16, தனித்தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் அவத் பிரதேசத்தின் 90 சதவிகிதத் தொகுதிகள் பாஜகவும் அதன் கூட்டணிகளுக்கும் கிடைத்திருந்தன. 9 மாவட்டங்களிலும் மொத்தம் உள்ள 59 இல் 51 தொகுதிகளில் பாஜக வென்றிருந்தது. பாஜகவின் கூட்டணியான அப்னா தளத்திற்கு ஒன்றும், எதிர்கட்சியான சமாஜ்வாதிக்கு 4 தொகுதிகள் மட்டும் கிடைத்திருந்தன. மீதம் உள்ள 4 இல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றிற்கு தலா 2 தொகுதிகள் கிடைத்திருந்தன. இதில், காங்கிரஸின் 2 மற்றும் பிஎஸ்பியின் ஒரு எம்எல்ஏவும் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்து விட்டனர்.

குறிப்பாக, தலைநகர் லக்னோவின் 9 தொகுதிகளில் பாஜக எட்டில் வென்று 2017 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைத்திருந்தது. இதற்கு முன்பான தேர்தலில் லக்னோவின் பெரும்பாலானத் தொகுதிகளை சமாஜ்வாதி வென்றிருந்தது. இதனால், அவத் மற்றும் தற்போதைய தலைநகரான லக்னோவின் தொகுதிகளில் வெல்பவர்கள் உபியில் ஆட்சி அமைக்க முடியும் எனும் கருத்து உருவாகி விட்டது.

எனவே, லக்னோவின் 9 தொகுதிகளில் பாஜக மற்றும் சமாஜ்வாதிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு 8 தொகுதிகளில் வென்றிருந்த பாஜகவிற்காக, லக்னோவின் ராணுவக் குடியிருப்பு பகுதியில் கடந்த தேர்தலில் ரீட்டா பகுகுணா ஜோஷி வென்றிருந்தார். தற்போது மக்களவை எம்.பியாகி விட்ட ரீட்டா தனது மகனுக்கு வாய்ப்பு கேட்டிருந்தார். இது குடும்ப அரசியலுக்கு வழிவகுக்கும் என மறுத்த பாஜக, தன் சட்டத்துறை அமைச்சர் பிரஜேஷ் பாதக்கை ராணுவக் குடியிருப்பில் போட்டியிட வைத்துள்ளது.

பிரச்சாரத்தில் அமித் ஷா

கடந்த தேர்தலில் பிரஜேஷ் அருகிலுள்ள லக்னோவின் மத்திய தொகுதியில் வென்றவர். இவரை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் முன்னாள் மாநில அமைச்சரான சுரேந்தராசிங் காந்தி போட்டியிடுகிறார். லக்னோவின் கிழக்கு தொகுதியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான அசுதோஷ் டாண்டண் போட்டியிடுகிறார். டாண்டணை எதிர்க்க சமாஜ்வாதியின் தேசிய செய்திதொடர்பாளரான அனுராக் பதோரியாவிற்கு வாய்ப்பளித்துள்ளது.

லக்னோவின் சரோஜினிநகர் தொகுதியில் பாஜகவிற்காக உ.பி. அமலாக்கத்துறையின் முன்னாள் இணை இயக்குநர் ராஜேஷ்வர்சிங் போட்டியிடுகிறார். இவரை சமாஜ்வாதி சார்பில் அதன் முக்கியத் தலைவரான அபிஷேக் மிஸ்ரா எதிர்க்கிறார்.

லக்னோவிற்கு அருகிலுள்ள ராய்பரேலியின் நகர தொகுதியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் முக்கியத் தலைவரான அகிலெஷிங்கின் மகள் அதித்திசிங் அக்கட்சி சார்பில் வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் அதித்தி அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். விவசாயிகள் மீது வாகனம் ஏற்றிய சம்பவம் நடைபெற்ற லக்கிம்பூர்கேரியும் இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு பாஜக சார்பில் அதன் எம்எல்ஏவான யோகேஷ் வர்மா மீண்டும் போட்டியிடுகிறார். 2017 தேர்தலில் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தின் 8 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x