Published : 23 Feb 2022 08:50 AM
Last Updated : 23 Feb 2022 08:50 AM

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் வரும் 25-ல் விசாரணை

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுக்கள் (பிஐஎல்)மீது பிப்.25-ல் விசாரணை நடத்தஉச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண் டுள்ளது.

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவ காரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரி வக்கீல் எம்.எல்.சர்மா, மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், பரன்ஜோய் குஹா தாகூர்தா, எஸ்.என்.எம்.அபிதி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்ஸா சதாஷி உள்ளிட்டோர் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இடைக்கால அறிக்கையையும் நிபுணர் குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறவிருந்தது.

இதனிடையே இந்த மனுக்கள் பிப்ரவரி 23-ம் தேதிக்குப் பதிலாக 25-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜராக உள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான மற்றொரு வழக்கில் ஆஜராக வேண்டியிருப்பதால் வழக்கு பிப்ரவரி 25-ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x