Published : 23 Feb 2022 08:30 AM
Last Updated : 23 Feb 2022 08:30 AM
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக நடிகர் பிரகாஷ்ராஜ் நியமனம் செய்யப்படலாம் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரையுலகில் மட்டுமல்லாது அரசியலிலும் அதிகம் நாட்டமுள்ளவர் பிரகாஷ்ராஜ். இவர் தெலுங்கு திரையுலக நடிகர் சங்க தலைவர் பதவியில் போட்டியிட்டு, நடிகர் மோகன்பாபுவின் மகனான விஷ்ணுவிடம் தோல்வி அடைந்தார். இதனால் தெலுங்கு திரையுலகில் பிரகாஷ் ராஜுக்கென தனி ஆதரவாளர்களும் உண்டு. மேலும், பாஜக வை அதிகம் விமர்சிக்கும் பிரகாஷ் ராஜ் தன்னுடைய கட்சிக்கு வந்தால், மாநிலங்களவையில் பாஜகவை தீவிரமாக விமர்சிக்கலாம் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நினைப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக விற்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் அவர், விரைவில் நடிகர் பிரகாஷ் ராஜை தெலங்கானாவின் ஆளும்கட்சி சார்பில் (டிஆர்எஸ்) மாநிலங்களவை உறுப்பினராக்குவார் என கூறப்படுகிறது. சமீபத்தில் மகாராஷ்டிர முதல்வரை சந்திக்க சென்ற சந்திரசேகர ராவை, திடீரென பிரகாஷ் ராஜ் சந்தித்ததால் இதுவரை இதுகுறித்த சந்தேகம் கூட தீர்ந்து விட்டதாக முதல்வர் சந்திரசேகர ராவின் நெருங்கிய வட்டாரம் தரப்பில் கூறப்படுகிறது.
டிஆர்எஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பண்டி பிரகாஷ் அப்பதவியை ராஜினாமா செய்து மேலவை உறுப்பினரானார். மேலும், வரும் ஜூன் மாதத்தில் டிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் கேப்டன் லட்சுமி காந்தாராவ் மற்றும் நிவாஸ் ஆகியோரின் பதவி காலமும் நிறைவடைகிறது. ஆகவே இந்த 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒரு பதவியை நடிகர் பிரகாஷ் ராஜுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT