Published : 21 Jun 2014 09:10 AM
Last Updated : 21 Jun 2014 09:10 AM

முந்தைய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே பதவி விலக வேண்டும்: வெங்கய்ய நாயுடு

முந்தைய அரசால் ஆளுநராகவும், பல்வேறு ஆணையங்களுக்கு தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டவர்கள், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தாங்களாக முன்வந்து பதவி விலக வேண்டும் என மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு பெங்களூரில் தெரிவித்தார்.

முன்னதாக, பெங்களூர் மல்லேஸ்வரத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை அவர் பார்வையிட்டார்.

இதனிடையே, ‘மெட்ரோ ரயில் பணிகளுக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.26 கோடி வழங்க வேண்டும்' என‌ கர்நாடக முதல்வர் சித்தராமய்யா வேண்டுகோள் விடுத்தார். பின்னர் சித்தராமய்யாவின் அரசு இல்லத்துக்குச் சென்ற வெங்கய்ய நாயுடு அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் சார்பாக கர்நாடகாவில் உள்ள அனைத்து நகர மேம்பாட்டு திட்டங்களுக்கும் தேவையான நிதி தொடர்ந்து வழங்கப்படும். ஐ.டி. துறையில் நாட்டின் முன்னணி நகரமாக இருக்கும் பெங்களூரை சர்வதேச தரத்துக்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

அப்போது அவரிடம், காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கர்நாடகா உள்ளிட்ட மாநில ஆளுநர்களை ராஜினாமா செய்யுமாறு பாஜக அரசு அழுத்தம் கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு வெங்கய்யா நாயுடு கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூறுவதுபோல ஆளுநர்கள் ராஜினாமா விவகாரத்தில் நாங்கள் யாரையும் அவமதிக்கவில்லை. ஆளுநர் நியமனத்தைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும்தான் முக்கிய முடிவை எடுக்கிறார்கள். மத்தி யில் ஆட்சியில் இருக்கும் கட்சி தங்களுக்கு வேண்டப் பட்டவர்களை ஆளுநர்களாக நியமிக்கிறது.

அரசியல்வாதிகளால் ஆளு நராகவும், பல்வேறு ஆணையங் களுக்கு தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டவர்கள், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தாங்களாக முன்வந்து தங்க‌ளுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இத்தகைய வழக்கம் தான் ஜனநாயக நாட்டில் காலங்காலமாக கடைப்பிடித்து வரப்படுகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x