

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஹண்டுவாரா நகரில் பள்ளி மாணவி ஒருவருக்கு ராணுவ வீரர் பாலியல் தொந்தரவு அளித்தாக புகார் எழுந்தநிலையில், அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என சம்பந்தப்பட்ட மாணவி விளக்கம் அளித்துள்ளார்.
குப்வாரா மாவட்டம், ஹண்டுவாரா நகரில் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, ராணுவ வீரர் ஒருவர் அவரை பாலியல் தொந்தரவு செய்ததாக தகவல் பரவியது. இதையடுத்து ஹண்டுவாரா நகரில் வன்முறை வெடித்தது. அங்குள்ள ராணுவ சாவடி ஒன்றை தீவைத்து எரித்த போராட்டக்காரர்கள் உள்ளூர் காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தினர். போலீஸ் அதிகாரிகளும் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இக்பால் அகமது, நயீம் பட் என்ற 2 இளைஞர்கள் நேற்று முன்தினம் இறந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜா பேகம் (70) என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இதனால் துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
பதற்றமான சூழல் நிலவியதால் ஹண்டுவாரா நகரிலும் தலைநகர் நகரில் 6 காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில் பாலியல் தொந்தரவு தரப்பட்டதாக கூறப்படும் மாணவி அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார். இதற்கு மாறாக உள்ளூர் மாணவர்கள் தன்னை அச்சுறுத்தியதாகவும் அவர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.
அவரது விளக்கம் சமூக வலைதளம் ஒன்றில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து அந்த மாணவி கூறும்போது, “அப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் சென்றுவிட்டு நான் வெளியில் வரும்போது, காஷ்மீர் மாணவர் ஒருவர் என்னை இடைமறித்து எனது புத்தகப் பையை பறித்துக் கொண்டார். பள்ளிச்சீருடையில் இருந்த அந்த மாணவர் என்னை கன்னத்தில் அறைந்தார். ராணுவ வீரருடன் உனக்கென்ன பேச்சு, காஷ்மீரில் உனக்கு யாரும் கிடைக்கவில்லையா என்று என்னை அவமானப்படுத்தினார். அவர் என்ன சொல்ல வருகிறார் என நான் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன். இந்நிலையில் பல மாணவர்கள் அங்கு கூடினர். அப்போது அருகில் போலீஸ் காவலர் ஒருவர் நின்றிருந்தார். அவரை சுட்டிக்காட்டி புத்தகப் பையை தராவிடில் அவருடன் நான் காவல் நிலையம் செல்வேன் என்றேன். உடனே அந்த மாணவர் எனது பையை தராமல் என்னை கெட்ட வார்த்தைகளால் பேசினார். இதையடுத்து பிற மாணவர்களும் பிரச்சினை செய்யத் தொடங்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சதிச் செயலில் ஈடுபட்டதாக கருதுகிறேன்” என்றார்.
இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் மணீஷ் குமார் கூறும்போது, “மாணவியின் விளக்கத்தால் சதிகாரர்களின் தீயநோக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உள்ளூர் இளைஞர் களின் பொய் பிரச்சாரம் எவ்வாறு பெரும் போராட்டத்துக்கு வழி வகுக்கிறது என்பதும் வெளியாகி யுள்ளது” என்றார்.