Published : 01 Apr 2016 06:01 PM
Last Updated : 01 Apr 2016 06:01 PM

நவீனமயமாகும் பயங்கரவாதம்... பழமையில் நீடிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள்: அமெரிக்காவில் மோடி கவலை

பயங்கரவாதம் அதிதொழில்நுட்பங்களுடன் நவீனமயமாகி வரும் நிலையில் அதனை எதிர்த்து முறியடிப்பதில் சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் பழமையாக உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

அமெரிக்காவில் நடைபெறும் அணுப்பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது:

பயங்கரவாதம் வளர்ந்து விட்டது. பயங்கரவாதிகள் 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு எதிரான நமது நடவடிக்கைகளிலோ புதுமை எதுவும் இல்லை, பழைய முறைகளைச் சார்ந்திருக்கிறது. சமீபத்தில் பிரஸல்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல் இதற்கு உதாரணம் என்பதோடு, பயங்கரவாத அச்சுறுத்தல் காலக்கட்டத்தில் அணுப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியமான விவகாரம் எவ்வளவு தேவையானது, எத்தனை அவசரமானது என்பதை உணர்த்துகிறது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா உலகப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சேவை புரிந்துள்ளார்.

முதலில் நடப்பு பயங்கரவாதம், தீவிர வன்முறையை ஒரு நாடகீயக் காட்சியாக அரங்கேற்றுகிறது. இரண்டாவதாக நாம் இதற்குக் காரணமானவரை குகையில் தேட முடியாது, நகரத்தில் ஸ்மார்ட் போன், கணினி ஆகியவற்றுடன் இருக்கும் பயங்கரவாதியை நாம் தேடுகிறோம். மேலும் அணு ஆயுதக் கடத்தல்வாதிகளுடன் நாட்டின் முகவர்கள், பயங்கரவாதிகள் ஆகியோரின் இணைவு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

பயங்கரவாதம் உலக அளவில் வலைப்பின்னலாக உருவெடுத்துள்ள போது, நாம் தேச எல்லைகளுக்குட்பட்டு அதனை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பயங்கரவாதத்தின் எல்லையும், அதற்கு ஆயுத, பொருளுதவி வழங்கும் வலைப்பின்னல்களும் உலகளாவிய பரிமாணத்தை எட்டிய அதே வேளையில் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அந்த பரிமாணங்களை எட்டவில்லை.

பயங்கரவாதம் என்பது வேறு ஏதோ ஒருவருடைய பிரச்சினை, அவர்களது பயங்கரவாதி, என் பயங்கரவாதி அல்ல போன்ற அணுகுமுறைகளையும், சிந்தனைப்போக்குகளையும் அறவே ஒழித்துக் கட்ட வேண்டும்.

அணுப்பாதுகாப்பு என்பது அனைத்து நாடுகளின், பெரிய அரசுகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அனைத்து நாடுகளும் தங்களது சர்வதேசப் பொறுப்புகளுக்கு கடமைப்பட்டவர்களாக இருப்பது அவசியம்.

இவ்வாறு கூறினார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x