

துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கு விசார ணையில், குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து ஆஜராகாததற்கு மும்பை நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் இவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமித்ஷாவுக்கு விலக்கு கோரி அவரது வழக்கறிஞர் ராபின் மோகரா மனு தாக்கல் செய்தார். “அமித்ஷா டெல்லியில் அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவரால் நீதிமன்றத்துக்கு வரமுடியவில்லை” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு சிபிஐ வழக்கறிஞர் பி.பி.ராஜு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி ஜே.டி.உத்பத், “தகுந்த காரணம் இன்றி ஒவ்வொரு முறையும் விலக்கு கேட்கிறீர்கள்” என்று ராபின் மோகராவிடம் கடிந்துகொண்டார். என்றாலும் அம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதனிடையே இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமித்ஷா அளித்த மனு மீது இந்த நீதிமன்றம் ஜூன் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கும் என்று தெரிகிறது.
குஜராத்தில் இருந்து இந்த ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில், அமித்ஷா உள்ளிட் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக வேண்டும் என கடந்த மே 9-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் அமித்ஷா மற்றும் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் உள்ளி்ட்ட 18 பேர் மீது சிபிஐ கடந்த 2013 செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
வழக்கு பின்னணி
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவராக கருதப்படும் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி காசர்பீ ஆகியோர் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படையினரால் கடந்த 2005 நவம்பரில் கடத்திச் செல்லப் பட்டு, காந்திநகர் அருகே போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். என்கவுன்டரை நேரில் கண்டவர் துளசிராம் பிரஜாபதி. எனவே இவரும் குஜராத் போலீஸாரால் 2006 டிசம்பரில் கொல்லப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த 2 சம்பவங்கள் தொடர்பான சதி ஆலோசனையில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.