

ஒரு வாரத்திற்கும் மேலாக ஒடிசா மாநில கடற்கரை மாவட்டங்கள் குறிப்பாக புவனேஸ்வரில் தணியாத வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
30 ஆண்டுகால வெயில் வரலாற்றை முறியடிக்கும் விதமாக புவனேஸ்வர் நகரில் திங்களன்று 47.5 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டியது. ஏப்ரல் மாதத்தில் பதிவாகும் அதிகபட்ச வெயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
காலையிலிருந்தே சூரியன் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. காலை 11.30 மணியளவில் 44 டிகிரி செல்சியஸைத் தொட்டது வெப்ப நிலை. நண்பகலுக்குள் மேலும் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. ஒரு மணிநேரம் கழித்து 45.2 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது ஏப்ரல் 23, 1985 அன்று அடித்த வெயிலைக் காட்டிலும் சற்று கூடுதலானது.
மதியம் 2 மணியளவில் வெயில் 45.7 டிகிரி செல்சியஸ் என்று அதிகரித்து உச்சம் பெற்றது. இது இயல்பான வெப்ப நிலையைக் காட்டிலும் 7-8 டிகிரி கூடுதலாகும். இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நிறைய மரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டதினால் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிகள் காலையில் தொடங்கி மதியத்துக்குள் முடிக்கப்படவேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் கடும் உழைப்பு தொடர்பான பணிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில வானிலை ஆய்வு மைய இயக்குநர் சரத் சந்திர சாஹூ கூறுவதாவது: "வானிலையில் மாற்றம் எதுவும் இல்லை. காற்று மேல்நோக்கி நகரவில்லை, இதனால் மேகங்கள் உருவாவதற்கான நிலைமைகள் சுத்தமாக இல்லை. கடந்த அக்டோபர் மாதம் முதலே மாநிலத்தில் மழை இல்லை. மண்ணும் வறண்ட மண் என்பதால் உஷ்ணம் பிரதிபலிக்க உதவுகிறது.
மேற்கு மற்றும் வட-மேற்கு பகுதியிலிருந்து வரும் உஷ்ணக் காற்று மத்திய இந்தியாவைக் கடந்து செல்கிறது. இதனாலேயே இப்பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. திங்களான இன்று மதியம் 2 மணியளவில் உச்சமடைந்த வெப்ப அளவு ஏப்ரல் மாதத்தில் 1952-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச பதிவாகியுள்ளது.
இடிமழைக்கு வாய்ப்பில்லாததால் அடுத்த வாரமும் இதே நிலையே நீடிக்கும். கடற்காற்றும் மந்தமடைந்திருப்பதால் ஒடிசாவில் நிலைமைகள் மோசமாக உள்ளன” என்றார்.
இன்று மதியம் 2 மணியளவில் புவனேஷ்வரில் 17 இடங்களில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸைக் கடந்து சென்றுள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.