

புதுடெல்லி: உடல், மனம், ஆன்மா, உணர்ச்சிகள் என அனைத்தையும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் கலையாக யோகா உள்ளது. இந்நிலையில் துபாயில் வசித்து வரும் 9 வயது இந்திய சிறுவன் ரேயான்ஷ் சுரானி, 4 வயதில் இருந்தே யோகா பயிற்சி பெற்று வருகிறார். தற்போது 9 வயதிலேயே அங்கீகரிப்பட்ட இளம் யோகா பயிற்சியாளராக மாறி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் யோகா மாஸ்டரானவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற யோகா பயிற்சியில் ரேயான்ஷின் பெற்றோர் கலந்து கொண்டனர். அப்போது முதல் ரேயான்ஷுக்கு யோகாவில் ஆர்வம் ஏற்பட்டது. இதுகுறித்து ரேயான்ஷ் கூறும்போது, "யோகா கலையில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. யோகா என்பது உடல் நிலை மற்றும் சுவாசம் பற்றி மட்டுமே என்று நான் முன்னர் நினைத்தேன். ஆனால் அது அதை விட அதிகம் என்பதை இப்போது புரிந்துகொண்டேன். இளம் வயதில் யோகா மாஸ்டரானது மகிழ்ச்சி. இந்தக் கலையை பலருக்கும் பயிற்றுவிக்க ஆர்வ மாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.