

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.42 லட்சத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கிருஷ்ணருக்கு கோயில் கட்டியிருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள மகேஷ்பதன் பகுதி யைச் சேர்ந்தவர் நவுஷத் ஷேக்(55). ராணீஷ்வர் பிளாக் பஞ்சாயத்து உறுப்பினராகவும் இருக்கிறார். வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நவுஷத் மகேஷ்பதன் பகுதியில் ரூ.42 லட்சம் சொந்த செலவில், அழகிய கிருஷ்ணர் கோயிலை கட்டி முடித்திருக்கிறார்.
இந்தக் கோயில் கடந்த திங்கட்கிழமை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இந்துக்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் கோயில் திறப்பு விழாவில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று சிறப்பித் தனர்.
‘முஸ்லிமாக இருந்தும் கிருஷ்ணர் கோயிலை ஏன் கட்டீனர்கள்?’ என்று கேட்டதற்கு நவுஷத் கூறியதாவது:
எல்லோருக்கும் கடவுள் ஒருவர்தான். ஆனால், ஒருவர் கோயிலில் வழிபடுகிறாரா அல்லது மசூதி, தேவாலயத்தில் வழிபடுகிறாரா என்பது முக்கியமல்ல. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். அதேநேரத்தில் பகவான் கிருஷ்ணர் என்னை கவர்ந்தார். மேற்குவங்கத்தின் மாயாபூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று வந்த பிறகுதான் இவை எல்லாம் நடந்தன.
மேலும், கடவுள் என் கனவில்வந்தார். நான் வசிக்கும் கிராமத்தில் அவர் இருப்பதாக கூறினார். அத்துடன் கிராமத்தில் ஒரு கோயில் கட்டும்படியும் எனக்கு அறிவுரை வழங்கினார். அந்த கோயிலுக்கு சென்று வந்த பிறகு, எனது கிராமத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று ஆண்டுகளில் இந்தக் கோயிலை கட்டி முடித்தேன். இவ்வாறு நவுஷத் கூறினார்.
திறந்த வெளியில் பார்த்தசாரதி என்ற பெயரில் பகவான் கிருஷ்ணரை வழிபட்டு வந்த உள்ளூர் மக்கள், தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.