

தனது 19-வது வயதில் மும்பைக்கு வந்தபோதுதான் பஸ், டாக்சியை நேரில் பார்த்தேன் என்று வேதாந்தா குழும நிறுவனர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
1970-களில் வேலை தேடி பிகாரிலிருந்து மும்பைக்கு வந்த அனுபவத்தை அவர் தனது ட்விட்டர் பதிவில் கடந்த வாரம் பகிர்ந்துள்ளார்.
வேலை தேடி மும்பைக்கு வரும் பல லட்சக்கணக்கானோரில் ஒருவனாக தானும் மும்பைக்கு வந்ததாகவும், அப்போது ஒரு டிபன் பாக்ஸும் போர்வை மட்டும்தான் தன்னிடம் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மும்பைக்குச் சென்றால் பணக்காரர் ஆகலாம் என்ற லட்சியத்தோடு வரும் பல லட்சக்கணக்கானோரில் தாமும் ஒருவர் என்று குறிப்பிட்ட அவர், முதலில் மும்பையின் வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கு வந்திறங்கிய பிறகு அதுவரை தாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த டாக்சி, டபுள் டெக்கர் பஸ் ஆகியவற்றை நேரில் பார்த்து வியந்து போனதாகத் தெரிவித்துள்ளார். கடினமாக உழைத்தால் நட்சத்திரத்தையும் எட்ட முடியும் என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் 67 வயதாகும் அனில் அகர்வால். இன்று இவரது சொத்து மதிப்பு 360 கோடி டாலராகும் (சுமார் ரூ. 27 ஆயிரம் கோடி).
தொடக்கத்தில் பழைய இரும்பு வியாபாரத்தில் இறங்கிய இவர் இன்று சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார். தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மற்றும் ஒடிசா மாநிலம் நியாம்கிரி மலைப் பகுதியில் உள்ள சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் இவரது குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
2005-ம் ஆண்டு ரெடிஃப் இதழுக்கு அளித்த பேட்டியில் 1970-ம் ஆண்டு 19 வயது இளைஞனாக மும்பைக்கு விமானத்தில் வந்ததாகத் தெரிவித்துள்ளார். அதிலும் மாணவர்களுக்கான சலுகைக் கட்டணத்தில் வந்ததாகவும், விமானத்தில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்றும் அப்போது தமக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதுதான் தனது முதல் விமானப் பயணம் என்று குறிப்பிட்டிருந்தார்.