

புதுடெல்லி: கடந்த 2008-ல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 தீவிரவாதிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்தது. 11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இருக்கும் புகைப்படங்களை காட்டினார். அப்போது அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:
அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கின் நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தண்டனை பெற்ற 49 பேரில் முகமது சைஃப் என்பவரும் ஒருவர். இவர் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ஷதாப் அகமதுவின் மகன் ஆவார். குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டு அதை நிகழ்த்தியுள்ளார். இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மவுனம் காத்தது ஏன்? அகிலேஷ் முதல்வராக இருந்தபோது அவருடன் முகமது சைஃப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். அவரை அகிலேஷ் விருந்துக்கு அழைத்திருந்தாரா? இதற்கு அகிலேஷ் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.
அகிலேஷ் மறுப்பு: இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் நேற்று கூறும்போது, “குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிகளுடன் எங்கள் கட்சிக்கு தொடர்பு இல்லை. பாஜக தலைவர்கள் பொய்களை தவிர வேறு எதுவும் பேசுவதில்லை” என்றார்.