Published : 19 Feb 2022 07:08 AM
Last Updated : 19 Feb 2022 07:08 AM

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நாளை ஒரேகட்ட தேர்தல்: உத்தரபிரதேச மாநிலத்தில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

சண்டிகர் / லக்னோ: பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் நேற்று மாலை பிரச்சாரம் நிறைவடைந்தது. இதுபோல் உத்தரபிரதேசத்தில் 3-ம் கட்ட தேர்தலை சந்திக்கும் 59 தொகுதிகளில்நேற்று மாலை பிரச்சாரம் முடிவுக்கு வந்தது.

மொத்தம் 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக நாளை(பிப். 20) தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் 2.14 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இம்மாநிலத்தில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கு ஆம் ஆத்மி கட்சி சவாலாக விளங்குகிறது.

பாஜகவின் நீண்ட கால தோழமைக் கட்சியான ஷிரோமணி அகாலி தளம் தனது நட்பை முறித்துக் கொண்டது. இதனால் இரு கட்சிகளும் தனித்தனி அணியாக தேர்தலில் போட்டியிடுகின்றன.

பாஜகவுடன் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸும் சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற புதிய கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதுபோல் ஷிரோமணி அகாலி தளம்கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சிஅணி சேர்ந்துள்ளது. இம்மாநிலத்தில் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.

உ.பி.யில் 3-ம் கட்ட தேர்தல்

பஞ்சாப் தேர்தலுடன் உத்தரபிரதேசத்தில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ம்தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல்கடந்த 14-ம் தேதியும் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 60.17 சதவீத வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில் 3-ம் கட்ட தேர்தல் நாளை (பிப் 20) நடைபெற உள்ளது. பெரோஸாபாத், மெயின்புரி, ஏட்டா, காஸ்கஞ்ச், ஹாத்ரஸ், கான்பூர், கான்பூர் ஊரகம், தெஹாத், அவுரயா, கன்னோஜ், எட்டாவா, ஃபரூக்காபாத், ஜான்சி, ஜலோன், லலித்பூர், ஹமீர்பூர், மஹோபா ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் மூன்றாம் கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளிலும் நேற்று மாலை6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.

245 கோடீஸ்வரர்கள் போட்டி

இதனிடையே உத்தரபிரதேசத்தில் மூன்றாம் கட்ட தேர்தலுக்குவேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை உத்தரபிரதேசம் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு,ஜனநாயத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) ஆகிய இருதன்னார்வ அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:

உத்தரபிரதேசம் மூன்றாம் கட்ட தேர்தலில் 627 பேர் போட்டியிடுகின்றனர். இதில் முழுமையான தகவல் இல்லாத மற்றும் சரிவர ஸ்கேன் செய்யப்படாத 4 வேட்பு மனுக்கள் தவிர, மற்ற 623 பேரின் வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 245 (அல்லது 39%) வேட்பாளர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிகபட்சமாக சமாஜ்வாதி கட்சி சார்பில் 52 பேர் இடம் பெற்றுள்ளனர். இதைடுத்து பாஜக சார்பில் 48 பேரும், பகுஜன் சமாஜ் சார்பில் 46 பேரும் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முறையே 29 மற்றும் 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பணக்கார வேட்பாளர்களுக்கு சீட் கொடுப்பதில் இருந்து, நமது தேர்தல்களில் பண பலத்தின் பங்கு தெளிவாகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x