

புதுடெல்லி: ‘‘சிஏஏ போராட்டத்தின் போது பொதுச் சொத்துகளை சேதப் படுத்தியவர்கள் மீதான 274 நோட்டீஸ்கள் திரும்பப் பெறப் பட்டுள்ளன’’ என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உ.பி. உட்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது உ.பி.யில் ஏராளமான பொதுச் சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. பேருந்துகள், கார்கள், வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இதுதொடர்பாக உ.பி. அரசு வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து பணம் வசூலித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உத்தர பிரதேச அரசு சார்பில் கூடுதல் அட்வடகேட் ஜெனரல் கரிமா பிரசாத் ஆஜரானார்.
அப்போது, அவர் கூறும் போது, ‘‘உ.பி.யில் சிஏஏ போராட் டக்காரர்களுக்கு வழங்கப் பட்ட 274 நோட்டீஸ்களை அரசு திரும்பப் பெற்றுள்ளது’’ என்று தெரிவித்தார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து வசூலித்த மொத்த பணத்தையும் உ.பி. அரசு திரும்ப அளிக்க வேண்டும். எனினும், சிஏஏ போராட்டக்காரர்களிடம் இருந்த உ.பி.யின் பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் மீது உ.பி. அரசு நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று உத்தரவிட்டனர்.
அப்போது அட்வகேட் ஜெனரல் கரிமா பிரசாத் வாதிடுகையில், ‘‘இந்த விவகாரத்தில் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப அளிப்பதற்கு பதில் சிஏஏ போராட்டக்காரர்களும், மாநில அரசும் சேத மீட்புத் தொகை தொடர்பாக தீர்ப்பாயத்தை அணுக அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று கோரினார். அந்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். -பிடிஐ