

புதுடெல்லி: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் உயர் ரகசிய மற்றும் ரகசிய ஆவணங்களை இணையத்தில் அனுப்ப கூடாது. அலுவலகங்களில் அமேசானின் எக்கோ, ஆப்பிளின் ஹோம் பாட், கூகுள் ஹோம் போன்ற டிஜிட்டல் உதவி சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. ஸ்மார்ட் போன் மற்றும் கைக்கடிகாரங்களில் அலெக்ஸா மற்றும் சிரி உள்ளிட்ட டிஜிட்டல் உதவி சாதனங்களை அணைத்து வைத்திருக்க வேண்டும்.
ரகசியம் காக்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் கூட்டம் அல்லது விவாதம் நடைபெறும்போது, அதிகாரிகள் தங்கள் ஸ்மார்ட் போன்களை கூட்ட அறைக்கு வெளியில் வைக்க வேண்டும்.
ரகசிய மற்றும் உயர் ரகசிய ஆவணங்களை, பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட அரசு தகவல் தொடர்பு தளங்களில் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்களில் ரகசிய மற்றும் உயர் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது.
வீடுகளில் இருந்து பணி புரிவோர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரானிக் சாதனங் களையே பயன்படுத்த வேண்டும். வீடுகளில் இருந்து பணிபுரியும் சூழலில் ரகசிய மற்றும் உயர் ரகசிய ஆவணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ரகசிய தகவல்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற தனியார் தகவல் தொடர்பு தளங்களில் அதிகாரிகள் பலர் பகிர்ந்து கொள்வதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ