

புது டெல்லி: கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகியமாநிலங்கள் பேசி தீர்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு பிரச்சினை நீடித்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்த கிருஷ்ணா நதி நீர் தீர்ப்பாயம் கடந்த 2011-ம் ஆண்டு மகாராஷ்டிரா, கர்நாடகா, பழைய ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு 2,130 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது.
இதை எதிர்த்து கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கடந்த 14 ஆண்டுகளாக உரிய நீரை வழங்கவில்லை என முறை யிட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 10-ம் தேதி, வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி போபண்ணா தான் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் விலகுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா (ஆந்திராவை சேர்ந்தவர்) முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ''இவ்வழக்கை விரைந்து விசாரிக்க தனி அமர்வை அமைக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.
இதனை பரிசீலிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘‘4 மாநிலங்களும் இந்தபிரச்சினையை ஏன் பேசி தீர்த்துக்கொள்ள கூடாது? பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முடிவு எட்டலாமே?''என அறிவுறுத்தினார். அதற்கு வழக்கறிஞர் ஷியாம் திவான்,'' இவ்வழக்கின் பல முக்கிய பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவே இறுதி முடிவாக இருக்கும்''என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் சந்திரசூட்,போபண்ணா ஆகியோர் இல்லாத அமர்வு இவ்வழக்கை விசாரிக்க ஏதுவாக வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைக்குமாறு உச்சநீதிமன்ற பதிவுத் துறைக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுறுத்தினார்.
செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்தல்
டெல்லியில் நேற்று கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, “கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும். இத்தி்ட்டத்தை மத்திய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும்" என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது என்று தமிழக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.