

இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் தீபேந்து பிஸ்வாஸ், மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்தல் களத்தில் குதித்துவுள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச போட்டி களில் 245 கோல்கள் அடித்துள்ளார் தீபேந்து பிஸ்வாஸ் (37). ஆனால், தேர்தல் களத்தில் இவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேற்குவங்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக போட்டியிட்டார். ஆனால், 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சமிக் பட்டாச்சார்யாவிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், தற்போது நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பிஸ்வாஸுக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பசிர்ஹட் சவுத் தொகுதியில் களம் இறங்கி உள்ளார் பிஸ்வாஸ். முதல் முறை வெற்றியை பறிகொடுத்த பிஸ்வாஸ், இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
இதுகுறித்து பிஸ்வாஸ் கூறியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு எனக்கு அரசியல் பற்றி அவ்வளவாக தெரியாது. அதனால், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுவிட்டேன். என் வாழ்நாள் முழுவதும் கால்பந்தாட்ட வீரனாக இருந்துள்ளேன். சில நேரங்களில் தோல்வியும் சில நேரங்களில் வெற்றியும் கிடைக்கும். இந்த முறை 100 சதவீதம் உறுதியாக வெற்றி பெறுவேன்.
இடைத்தேர்தலில் நான் தோற்ற அந்த நாளில், ‘அடுத்த சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட தயாராகி கொள்ளுங்கள்’ என்று முதல்வர் மம்தா பானர்ஜி முழு ஆதரவு அளித்தார். இப்போது தயாராக இருக்கிறேன். கடந்த முறை ஏற்பட்ட தோல்வி என்னை இன்னும் உறுதியானவனாக்கி உள்ளது.
நான் பசிர்ஹட்டை சேர்ந்தவன். இங்கு வளர்ந்தவன். 100 ஆண்டு பழமையான நகராட்சி இங்குள் ளது. ஆனால், சாலை, தெரு விளக்கு, குடிநீர் எதுவும் கிடையாது. ஆனால், ‘மக்களின் பிரச்சினை களில் கவனம் செலுத்து’ என்று தீதி (மம்தா அக்கா) கூறினார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வில் லாமல் உழைத்து மக்கள் பிரச்சினை களை தீர்த்து வைத்துள்ளேன். குடிநீர் வசதி பல அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்திருக் கிறேன். அதற்கு நிச்சயம் மக்கள் எனக்கு பரிசாக தேர்தல் வெற்றியை கொடுப்பார்கள்.
இவ்வாறு தீபேந்து பிஸ்வாஸ் கூறினார்.