

கேரளாவில் கடந்த வாரம் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட வெடி விபத்தில், கோயில் அதிகாரிகள் காயமடையாதது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி (காளி) கோயிலில் கடந்த 9-ம் தேதி நள்ளிரவில், இரு பிரிவினரிடையே பட்டாசு, வாண வேடிக்கை போட்டி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 113 பேர் பலியாயினர். மேலும் காயமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக மாநில குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, கோயில் நிர்வாகிகள், பட்டாசு ஒப்பந்ததாரர்கள் உட்பட 13 பேரை கைது செய்தனர். வரும் 20-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியிருந்தது.
இதனிடையே, இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, இவர்கள் அனைவரும் பரவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப் பட்டனர். அப்போது, இந்த பட்டாசு வெடி விபத்தில் கோயில் நிர்வாகிகள் யாரும் காயமடையாதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய போலீஸாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கைது செய்யப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
மேலும் கோயில் நிர்வாகிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, “மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்ததையடுத்து, பட்டாசு வெடிக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டோம். பட்டாசு போட்டி நடைபெறாது என கடந்த 8-ம் தேதி அறிவித்தோம். மேலும் இதற்காக செலவிடப்பட்டுள்ள தொகையை பட்டாசு ஒப்பந்ததாரர்களுக்கு திருப்பித் தருவதாகவும் அவர்களிடம் தெரிவித்தோம். ஆனால், பட்டாசு போட்டி நடைபெற்றதா இல்லையா என எங்களுக்கு தெரியாது. எனவே, இதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை” என்றார்.