

போபால்: "பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரக்யா தாக்குர் கூறும் கருத்துகள் சர்ச்சைக்குள்ளாவது புதிதல்ல. எனினும், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை ஓயாத நிலையில் இவரது கருத்து சலசலப்பைக் கூட்டியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரக்யா தாகூர் பங்கேற்றிருந்தார். அப்போது அவர், "ஹிஜாபை பொது இடங்களில் அணிய வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக உணராதவர்களே ஹிஜாப் அணிகிறார்கள். உங்களுக்கு மதரஸாக்கள் உள்ளன. அங்கு நீங்கள் ஹிஜாப் அணிந்து செல்லுங்கள். எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் பொது இடங்களில் இந்து சமூகம் உள்ளது. அங்கே நீங்கள் ஹிஜாப் அணியத் தேவையில்லை. இந்துக்கள் பெண்களை வணங்குகின்றனர். இந்துக்கள் பெண்களை மோசமான பார்வையில் பார்ப்பதில்லை. அதனால் நீங்கள் உங்களை ஹிஜாப் என்ற திரைபோட்டு மறைக்கத் தேவையில்லை. பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.
பிரக்யா தாக்குர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி விவாதப் பொருளாகியுள்ளது.
முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘‘கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது'' என உத்தரவிட்டது. ஆனால், நேற்று (புதன்கிழமை) கர்நாடகாவில் கல்லூரிகளுக்கு வந்த மாணவிகள் பலரும் ஹிஜாப் அணியக்கூடாது எனக் கல்லூரி நிர்வாகங்கள் கூறியதால் பலரும் தேர்வைக் கூட புறக்கணித்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.