Published : 17 Feb 2022 08:19 AM
Last Updated : 17 Feb 2022 08:19 AM

காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து தலைவர்கள் வெளியேறுவது கவலை அளிக்கிறது: கட்சி சுயபரிசோதனை செய்ய சோனியாவுக்கு அதிருப்தி தலைவர்கள் கோரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸில் இருந்து ஒவ்வொரு தலைவராக வெளியேறுவது கவலையளிக்கிறது. இதுகுறித்து கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸில் இருந்து விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான அஸ்வினி குமார் நேற்று முன்தினம் அறிவித்தார். அவரது விலகல் காங்கிரஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமானால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா, மனீஷ் திவாரி, சசி தரூர் உள்ளிட்ட 23 தலைவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டில் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட 23 அதிருப்தி தலைவர்கள் கொண்ட குழுவினர், ஆங்கிலத்தில் ‘குரூப்’ (குழு) என்பதில் முதல் எழுத்தைக் கொண்டு ஜி-23 தலைவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அஸ்வினி குமார் விலகல் குறித்து குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜி-23 தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆசாத் கூறியதாவது: காங்கிரஸில் இருந்து ஒவ்வொரு தலைவராக வெளியேறுவது மிகவும் தீவிரமான கவலைக்குரிய விஷயம். நாடு முழுவதும் காங்கிரஸின் பல்வேறு தளங்களில் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வெளியேறுவது கவலையளிக்கிறது. கட்சியில் இருந்து வெளியேறும் தலைவர்கள் எந்த ஒரு தனிநபரின் அல்லது ஏதேனும் ஒரு கட்சியின் விருப்பப்படி நடக்கின்றனர் என்று கூறுவது சரியல்ல. காங்கிரஸில் சில குழப்பங்கள் இருக்கின்றன.

அது பல கால மாக காங்கிரஸுக்கு உழைத்து வரும் தலைவர்களுக்குக் கூட தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. தலைவர்கள் அடுத்தடுத்து ஏன் வெளியேறுகிறார்கள் என்பதற்கான காரணத்தைக் கண்டறிய காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டும். வலுவான ஒன்றுபட்ட காங்கிரஸ் நாட்டு நலனுக்குத் தேவையாக உள்ளது. அஸ்வின் குமாரின் தந்தை சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரத்துக்கு முன்பிருந்தே அவரது குடும்பத்துக்கும் காங்கிர சுக்கும் தொடர்பு உள்ளது. அப்படிப்பட்டவர் கட்சியில் இருந்து வெளியேறினால் ஏதோ தவறு என்று அர்த்தம். இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, மக்களவை எம்.பி. மனீஷ் திவாரி ஆகியோர் கூறும்போது, “அஸ் வினி குமார் வெளியேறியது வருத்தமளிக்கிறது. 40 ஆண்டுகளாக கட்சிக்கு பணியாற்றிவர் வெளியேறுவது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் தீவிரமான மற்றும் நேர்மையான முறையில் சுயபரிசோதனை செய்ய வேண்டும் அதற்கான நேரம் இது’’ என்று தெரிவித்துள்ளனர்.

ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தனது ட்விட்டர் பதிவில், ‘‘அஸ்வினி குமார் எனது பழைய நண்பர். சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் காங்கிரசை விட்டு வெளியேறியது துரதிர்ஷ்டம்’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே, ‘‘5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளி்யாகிறது. அதன் முடிவு காங்கிரசுக்கு சாதகமாக இல்லை என்றால் கட்சியில் பிளவு வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x