கேரளாவில் பார் உரிமம் வழங்க லஞ்சம்: கே.எம்.மாணி மீதான விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கேரளாவில் பார் உரிமம் வழங்க லஞ்சம்: கே.எம்.மாணி மீதான விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில், கேரள முன்னாள் நிதியமைச்சர் கே.எம்.மாணி மீதான விசாரணைக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கேரள மாநிலத்தில் மது பார் உரிமம் வழங்க, நிதியமைச்சரும் கேரள காங்கிரஸ் (எம்) கட்சித் தலைவருமான கே.எம். மாணி (82) ரூ.5 கோடி கேட்டதாகவும் முதல் தவணையாக ரூ.1 கோடி பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக மாணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு திருவனந்தபுரம் லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மாணி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.டி.ராஜன் விசாரித்து, மாணி மீதான விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், ‘‘இந்த வழக்கில் போலீஸார் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு அவசரம் எதுவும் இல்லை’’ என்று கூறி வழக்கு விசாரணையை மே 19-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக கே.எம்.மாணி தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, “இந்த வழக்கில் ஏற்கெனவே மாநில குற்றப்பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் ஊழல் கண்காணிப்புத் துறை கண்காணிப்பாளர் பொய்யான விசாரணை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “இந்த வழக்கின் விசாரணை அதிகாரி எஸ்பி ஆர்.சுகேசன், கேரள பார் ஹோட்டல் சங்கத் தலைவர் பிஜு ரமேஷை தூண்டி விட்டு மாநில அமைச்சர்கள் நால்வர் மீது லஞ்சப் புகார் கூற வைத்துள் ளார். ரமேஷ் கூறிய குற்றச் சாட்டின்படிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னாள் அமைச்சர் மாணி, கோட்டயத்தில் உள்ள பாலா தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in