பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாக மார்க்‌சிஸ்ட் அச்சுதானந்தன் மீது முதல்வர் உம்மன் சாண்டி ஆவேசம்: வழக்கு தொடரப் போவதாகவும் எச்சரிக்கை

பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாக மார்க்‌சிஸ்ட் அச்சுதானந்தன் மீது முதல்வர் உம்மன் சாண்டி ஆவேசம்:  வழக்கு தொடரப் போவதாகவும் எச்சரிக்கை
Updated on
1 min read

கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக முதல்வர் உம்மன் சாண்டி எச்சரித்துள்ளார்.

கேரளாவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பறக்க நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்துடன் களம் இறங்கியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை மையப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். முதல்வர் உம்மன் சாண்டி மீது உச்ச நீதிமன்றத்தில் 31 வழக்குகளும் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா மீது 9-க்கும் மேற்பட்ட லஞ்ச வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள முதல்வர் உம்மன் சாண்டி, அவருக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் எனக்கு எதிராக 31 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இது தவிர, பல்வேறு நீதிமன்றங்களில் என் மீதும் எனது அமைச்சர்கள் மீதும் 136 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இது பொய்யான குற்றச்சாட்டு. இது குறித்து அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பொய் குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறாவிட்டால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் அச்சுதானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே சமயம் உம்மன் சாண்டி தலைமையிலான அரசில் ஊழல் நடந்திருப்பதாக உள்துறை அமைச்சரான ரமேஷ் சென்னிதலாவே குற்றம்சாட்டி காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் கடிதம் அனுப்பி இருப்பதாக அச்சுதானந்தன் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அந்த கடிதத்தின் நகல் தன்னிடம் இருப்பதால் எந்தவொரு வழக்கையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கேரள அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in