Published : 16 Feb 2022 01:23 PM
Last Updated : 16 Feb 2022 01:23 PM

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி நடவடிக்கை

மங்களூரு உடுப்பி நகரில் ஷங்கர் அரசு முதல்நிலைக் கல்லூரியில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மாணவிகள் | படம்: மஞ்சுநாத்

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்ட நிலையில், இன்று கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. ஹிஜாப் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

முன்னதாக இவ்விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம், ''கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது'' என உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த திங்கள்கிழமை 10-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிகளுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஹிஜாபை அகற்றிவிட்டு வந்த பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (பிப்.16) பியுசி, பட்டயக் கல்லூரிகள், பாலிடெக்னிக், நர்சிங் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன. இன்றும், ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை.

ஆசிரியர்களுடன் வாக்குவாதம்: இதனால், "கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்களிடம் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கல்லூரியின் முதல்வர், ‘நாங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படியே நடக்கிறோம். கல்லூரிக்குள் ஹிஜாப், புர்கா அல்லது காவித் துண்டு அணிந்துவர அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்றார். ஆனால் மாணவிகள் அங்கிருந்து நகராமல், ’நீதி வேண்டும்’ என்று முழங்கினர். மேலும், தங்களை வாயிலுக்கு வெளியே பொது இடத்தில் வைத்து புர்காவை அகற்றச் சொல்வது அவமதிக்கும் செயல் என்றும் கோஷமிட்டனர்.

பிப்ரவரி 5ஆம் தொடங்கிய சர்ச்சை: கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து முதன்முதலாக கடந்த 5-ம் தேதி பி.யு.சி (மேல்நிலை வகுப்புகள்) மற்றும் பட்டயகல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டதால் கடந்த 9-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு அருகே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுப்பி, ஷிமோகா, மைசூரு ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள‌து. அதேபோல கல்வி நிலையங்களுக்கு அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், '' தேர்வுகள் நெருங்கி வருவதால் கல்லூரிகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

மாணவிகள் தரப்பு வாதம்: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி களில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவ்வழக்கு உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஸ்லிம் மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், “மாணவிகள் ஹிஜாப் அணிவதால் யாருக்கும் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை. பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் மக்களின் மத நம்பிக்கையிலும், தனிப்பட்ட உரிமையிலும் அரசு தலையிட முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் 25-ம் பிரிவின்படி ஒருவர் தனது மத நம்பிக்கைகளை பின்பற்று வதற்கு முழு உரிமை இருக்கிறது.

நான் பள்ளிக்கு செல்லும்போது ருத்ராட்சை அணிந்து சென்றேன். எனது மத நம்பிக்கை என்பதால் யாரும் அதை தடுக்கவில்லை. இப்போதும் கூட நீதிபதிகள் ருத்ராட்சை அணிகிறார்கள். தங்கள் மத நம்பிக்கையின்படி நீதிபதிகள் இதை அணி கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் தென்னிந்திய இந்து பெண் ஒருவர் வகுப்பில் மூக்குத்தி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாணவியின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு, அவருக்கு மூக்குத்தி அணிய அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல கனடா நீதிமன்றம் சீக்கியர் தலைப்பாகை அணிந்து வகுப்பில் கல்வி கற்க அனுமதி அளித்துள்ளது. இதைப் போல ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்க வேண்டும். உயர் நீதி மன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என வாதிட்டார். இதனை கேட்டறிந்த நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x