

கம்மம்: தெலங்கானா மாநிலத்தின் முலுகு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினர் கொண்டாடும் சம்மக்க சரக்கா ஜாதரா திருவிழாவின் இன்றைய நிகழ்வில் மக்கள் புனித நீராடி இறைவனை வணங்கினர்.
தெலங்கானா மாநிலத்தில் பழங்குடியினர் நடத்தும் மேதாரம் ஜதாரா திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள பழங்குடியினர், மேதாராம் ஜதாரா என்ற திருவிழாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடுவர்.
கோயா பழங்குடியினர் கலந்துகொள்ளும் இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறும். கும்பமேளாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய திருவிழா இது.
தேவி சமக்கா மற்றும் தேவி சரலம்மா ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த மேதாரம் ஜதாரா விழாவை பழங்குடியின மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் பல கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் கூடுவர்.
தெலங்கானா அரசின் பழங்குடியினர் நலத்துறையுடன் இணைந்து மத்திய அரசு இந்த திருவிழாவுக்கு நிதி வழங்குகிறது. இந்த திருவிழாவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் ரூ.2.26 கோடி நிதி ஒதுக்கியது. இதன் மூலம் கோயா திருவிழாக்கள், மாநில அளவிலான போட்டிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பொருளாளதார உதவி போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விழாவின் பார்வையாளர்கள் மற்றும் தெலங்கானா பழங்குடியின மக்கள் இடையே விழிப்புணர்வு மற்றும் நல்லிணக்க பிணைப்பை ஏற்படுத்தவும், இந்த விழாவுக்கு பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து நிதியுதவி அளிக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
படங்கள்: ஜி.என்.ராவ்