Published : 12 Jun 2014 12:00 AM
Last Updated : 12 Jun 2014 12:00 AM

சமூகம் பிளவுபட்டதால் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நல்ல பலன்: மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

வகுப்புரீதியில் சமூகம் பிளவுபட்டதால் மக்களவைத் தேர்தலில் பாஜக நல்ல பலனை அறுவடை செய்தது என மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியானது திட்டமிட்டு மதரீதியில் சமூகத்தை பிளவுபடுத்தியது. மேம்பாட்டுக் கொள்கைகளை முன்வைத்து அது தேர்தலில் வெற்றி பெறவில்லை. சமூகம் பிளவுபட்டதால் பாஜக நல்ல பலன் பெற்றுள்ளது. நல்ல நிர்வாகம் வழங்குவதிலும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

திரிணமூல் காங்கிரஸ்

மக்கள் நல கொள்கைகளிலிருந்து அரசு விலகிச் சென்றால் அதை திரிணமூல் காங்கிரஸ் எதிர்க்கும் என்றார் அக் கட்சியின் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய். முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்வது அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

சந்தன் மித்ரா (பாஜக):

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் யோசனைகளை மோடி அரசு அப்படியே காப்பி அடிப்பதாக கூறுவது தவறானது. சாமானியர்களின் கனவுகளை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது மோடி அரசு.

டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்)

காவிரி உள்பட நதி நீர் பிரச்சினைகளுக்கும் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண எல்லா மாநிலங்களையும் அழைத்துப் பேச அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதை செய்யாமல் மீனவர் பிரச்சினையில் நியாயம் கிடைக்க வழிகாண முடியாது.

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்யவேண்டும். ஒரு கட்சியின் கொள்கை அடிப்படையில் அல்லாமல் தேசிய அளவில் கருத்தொற்றுமை கண்டு அதனை அடித்தளமாக கொண்டு வெளியுறவு கொள்கையை வகுக்க வேண்டும்.

இந்தியாவில் கல்வி தனியார் மயமாக்கப்படுகிறது. தனியார், அரசு பங்கேற்புடன் கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துவது வியாபாரமாகும். இதை 12-வது ஐந்தாண்டுத்திட்டத்தில் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். நவீன தாராளமய கொள்கைகள் அமல்படுத்தப்படுவதால் நாட்டில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும்.

திருச்சி சிவா (திமுக)

நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் வேதனை போன்றவை பற்றி குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடாதது ஏமாற்றம் தருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் மறுவாழ்வு நடவடிக்கைகள் பற்றிய கொள்கை எதுவும் இந்த உரையில் அறிவிக்கப்படவில்லை.

தில்லுமுல்லு செய்து குறுக்கு வழியில் மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதாக இந்த விவாதத்தில் சிவா குறிப்பிட்டதற்கு அதிமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். சைபுதீன் சோஸ் (காங்கிரஸ்), அஸ்வனி குமார் (காங்கிரஸ் ) ஜி.என்.ரத்தன்புரி (தேசியவாத காங்கிரஸ்), பிரமோத் மகாபாத்ரா (சுயேச்சை), ரண்பீர் சிங் பிரஜாபதி (இந்திய லோக்தளம்)உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்றனர்.பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x