

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் சார்மினார்அருகே உள்ள சுரங்கப்பாதையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நேற்று ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதற்கு ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் எதிர்ப்புதெரிவித்ததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
நம் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் பிளேக் நோய் தீவிரமாக பரவியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் பின்னர், ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர், இந்நோய் மெல்ல அழிந்தது. இதனைக் கொண்டாடும் வகையில்கடந்த 1591-ம் ஆண்டு ஹைதரா பாத்தில், மசூலிப்பட்டினம் - கோல்கொண்டா கோட்டை சந்திப்பு சாலையின் மையப்பகுதியில் 4 தூண்கள் கொண்ட சார்மினார் கட்டிடம் முகமது குலி குதூப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. இதனை மையமாக வைத்துதான் பழைய ஹைதராபாத் நகரம் உருவானது. பெர்சியாவிலிருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, இந்திய-இஸ்லாமிய வடிவமைப்பில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. கிரானைட் கற்களாலும், சுண்ணாம்பு கற்களாலும் இது கட்டப்பட்டது.
சார்மினாருக்கும் கோல்கொண்டா கோட்டைக்கும் ஒரு சுரங்கப்பாதை உள்ளது என்றும் ஒரு சாரார் கூறுவது வழக்கம். மேலும், சிலர் அங்குள்ள பாக்கியலட்சுமி கோயிலுக்கு மேல்தான் சார்மினார் கட்டப்பட்டதாக கூறுவதும் உண்டு. அதனால்தான் தற்போது சார்மினாரின் ஒரு தூணின் அருகே சிறிய பாக்யலட்சுமி கோயில் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு பல பிரமுகர்கள் ஹைதராபாத் வந்தால் பாக்யலட்சுமியையும் வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பழங்கால கட்டிடமான சார்மினார் தற்போது மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், நேற்று சார்மினாரின் அருகே உள்ள சாலையில், திடீரென தொல்பொருள் ஆராய்ச்சிதுறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். அப்போது, பாக்கியலட்சுமி கோயிலின் அருகே படிக்கட்டுகள் இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்த அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் மற்றும் சில இஸ்லாமிய அமைப்பினர் சம்பவ இடத்திற்கு வந்துதொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் வாக்குவாதம் செய்து ஆராய்ச்சியை தடுத்து நிறுத்தினர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பிரச்சினை பெரிதாவதற்குள் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, தற்காலிகமாக ஆராய்ச்சி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.