மாநிலங்களவைக்கு 4 பேர் போட்டியின்றி தேர்வு
ஆந்திராவில் இருந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழகத்தில் இருந்து நவநீதகிருஷ்ணனும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் தமிழகத்தைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியின் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி காலமானதால் ஒரு இடமும், ஒடிசாவில் மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் 2 இடங்களும் காலியாயின.
இதையடுத்து மாநிலங்கள வையில் காலியாக இருந்த 4 இடங்களுக்கும் ஜூலை 3-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஒரு இடத்துக்கு அதிமுக சார்பில் தற்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் போட்டியிட்டார். செவ்வாய்க்கிழமை நடந்த வேட்புமனு பரிசீலனையின்போது, நவநீதகிருஷ்ணன் மனு மட்டும் ஏற்கப்பட்டது. பத்மராஜன் உள்பட 4 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியும் சட்டசபை செயலாளருமான ஜமாலுதீன் அறிவித்தார்.
அதேபோல, ஆந்திராவின் ஒரு இடத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மனு செய்திருந்தார். எதிர்த்து வேறு யாரும் மனு செய்யாததால் அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஒடிசாவில் 2 இடங்களுக்கு ஆளும் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஏ.யு.சிங்டியோ, பூபிந்தர் சிங் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
