Published : 15 Feb 2022 06:49 AM
Last Updated : 15 Feb 2022 06:49 AM

உ.பி. 2-ம் கட்ட தேர்தலில் 61% வாக்குகள் பதிவு: கோவாவில் 79%, உத்தராகண்டில் 62.5% வாக்குகள்

உத்தராகண்ட் சட்டப் பேரவைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஹரித்துவாரிலுள்ள வாக்குச்சாவடியில் நேற்று வாக்களிப்பதற்காக அடையாள அட்டையுடன் வரிசையில் காத்திருந்த சாதுக்கள். படம்:பிடிஐ

புதுடெல்லி: கோவா சட்டப்பேரவைத் தேர்தலில்78.94% வாக்குகளும், உத்தராகண்டில் 62.5% வாக்குகளும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற உத்தர பிரதேசத்தில் 60.69% வாக்குகளும் பதிவாயின.

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு கடந்த ஜனவரி 8-ம் தேதி தேர்தல்அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகவும்மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. பஞ்சாப்,கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் ஒரேகட்டமாக பிப்ரவரி 14-ல் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் பஞ்சாப் தேர்தல் மட்டும் பிப். 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. அறிவிக்கப்பட்டபடி கோவா, உத்தராகண்ட்டில் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் 2-ம் கட்டமாக 55 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

உத்தர பிரதேசம், கோவாவில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மலைகள் சூழ்ந்த உத்தராகண்டில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

55 தொகுதிகள்

அதேபோல், 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதே சத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக சஹரான்பூர், பிஜ்னோர், மொராதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, படாவுன், பரெய்லி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங் களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

மக்கள் ஆர்வம்

3 மாநிலங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைச் செலுத்தினர். வாக்காளர்அடையாள அட்டை இல்லாதவர்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட9 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து தங்களது வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. வாக்குப்பதிவின் முடிவில் கோவா மாநிலத்தில் 78.94 சதவீத வாக்குகளும், உத்தராகண்டில் 62.5 சதவீத வாக்குகளும், உத்தரபிரதேச 2-வது கட்டத் தேர்தலில் 60.69 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை தலை மைத் தேர்தல் ஆணையம் செய்திருந்தது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிகம்பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x