

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். அணையை பலப் படுத்திய பிறகு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ள லாம்’ என்று கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை செயல்படுத்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த அணையின் நிர்வாகத்தை தமிழகமும், பாது காப்பை கேரளமும் கவனித்து வருகிறது. கேரள அரசு பாதுகாப்பு வழங்குவதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு வழங்கி விடுகிறது.
முல்லைப் பெரியாறு அணைக் குள் நுழையும் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தாக்கப் படும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்ததால், தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இம்மனு மீது மத்திய அரசு மற்றும் கேரள அரசு சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், மத்திய பாது காப்பு கோரிய வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் ஆர்.பானுமதி, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், உங்கள் இஷ்டத்துக்கு கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய முடியாது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல் படுத்தக் கோரி மனு தாக்கல் செய்யலாம் அல்லது தீர்ப்பில் மாற்றம் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் ராகேஷ் திவேதி, மத்திய பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரி வித்ததுடன், முந்தைய உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி புதிதாக சீராய்வு மனு தாக்கல் செய்கிறோம் என்று கூறினார்.