ஷாரியத் சட்டப்படி அல்ல; அரசியல் சாசனப்படியே இந்தியா ஆளப்படும்: யோகி ஆதித்யநாத்

ஷாரியத் சட்டப்படி அல்ல; அரசியல் சாசனப்படியே இந்தியா ஆளப்படும்: யோகி ஆதித்யநாத்
Updated on
1 min read

லக்னோ: இந்தியா அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர ஷாரியாத் (இஸ்லாமிய) சட்டத்தால் அல்ல உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 55 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டி ஒன்று மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதில் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இந்தியா, அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர இஸ்லாமியர்களுக்கான ஷாரியத் சட்டத்தின்படி ஆளப்படாது. நமது பிரதமர் மோடி, முத்தலாக் முறையை ரத்து செய்தார். இதனால் முஸ்லிம் மகள்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மரியாதையை மாண்பை பிரதமர் உறுதி செய்துள்ளார். அந்த மகளுக்கான மாண்பை உறுதி செய்யவே நமது தேசம் அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர ஷாரியத் சட்டத்தால் அல்ல எனக் கூறுகிறோம்" என்றார்.

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி, இந்தியாவில் ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராவார் எனக் கூறியுள்ளது பற்றி ஆதித்யநாத் கூறுகையில்,"நமது மகள்கள் ஹிஜாப் அணிய விரும்பினால், 'அணிந்துகொள், யார் உன்னைத் தடுக்கிறார் என்று பார்ப்போம்' என்று பெற்றோர் சொல்ல வேண்டும். அவர்கள் ஹிஜாப், நிகாப் அணிந்து பள்ளிக்குச் செல்லட்டும்... டாக்டர்களாகவோ, கலெக்டர்களாகவோ, தொழிலதிபர்களாகவோ ஆகட்டும். ஒருநாள், ஹிஜாப் அணிந்த ஒரு பெண் நமது பிரதமராகவும் ஆகலாம், நான் அப்போது உயிரோடு இல்லாமல் கூட போகலாம்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "நாட்டின் மீதும் அதன் அமைப்புகளின் மீது நாம் நமது தனிப்பட்ட மத நம்பிக்கைகளை, வாய்ப்புகளை திணிக்க முடியாது. நான் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களையும் காவி உடை அணியுமாறு நிர்பந்தப்படுத்த முடியுமா? முடியாதல்லவா? ஆகையால் பள்ளிகளில் சீருடை அவசியம். தேசம் அரசியல் சாசனத்தின்படி இயங்கும்போது பெண்களின் பாதுகாப்பும், மாண்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்படும்.

நான் மீண்டும் கூறுகிறேன், இது புதிய இந்தியா. உலகளவில் பிரபலமான தலைவரைப் பிரதமராகக் கொண்ட புதிய இந்தியா. இந்த புதிய இந்தியா உலகம் இருக்கும்வரை அரசியல் சாசனப்படி மட்டுமே ஆளப்படும். தலிபான் மனப்பான்மை கொண்ட சில மதவெறியர்களின் எண்ணங்கள் என்றுமே நிறைவேறாது" என்றார்.

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை குறித்த வழக்கு இன்று மதியம் 2.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in