Published : 14 Feb 2022 05:28 AM
Last Updated : 14 Feb 2022 05:28 AM

உத்தரபிரதேசத்தில் 55 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: கோவா, உத்தராகண்டில் இன்று தேர்தல்

உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. சமோலி மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து இல்லாத ஒரு வாக்குச்சாவடிக்கு நேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நடந்தே எடுத்துச் சென்ற அதிகாரிகள்.படம்: பிடிஐ

புதுடெல்லி: கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ள மொத்தம் 110 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்றுஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது.உத்தரபிரதேசத்தில் 55 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு கடந்த ஜன.8-ம் தேதி தேர்தல்அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகவும் மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் ஒரேகட்டமாக பிப்.14-ல்வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பஞ்சாப் தேர்தல் மட்டும் பிப்.20-ம்தேதிக்கு மாற்றப்பட்டது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடக்கிறது.

அறிவிக்கப்பட்டபடி கோவா, உத்தராகண்ட்டில் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நடக்கும் தேர்தலில் ஆளும் பாஜக,காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ்,ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த், பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத் (காங்கிரஸ்), ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அமித் பலேகர் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கருக்கு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கட்சியில் இருந்து விலகிய அவர், தனதுதந்தையின் தொகுதியான பனாஜியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

வாக்குப்பதிவு மையங்களுக்கு முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சுலபமாக வந்து செல்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தராகண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. 70 உறுப்பினர்களைக் கொண்ட அந்த மாநில சட்டப்பேரவைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக,காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 81 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 11,447 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அமைச்சர்கள் சத்பால் மஹராஜ், சுபோத் உனியல், அர்விந்த் பாண்டே, தன்சிங் ராவத், ரேகா ஆர்யா மற்றும் மாநில பாஜக தலைவர் மதன் கவுஷிக் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இதுபோல காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்,முன்னாள் அமைச்சர் யஷ்பால் ஆர்யா, மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியால், பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரீத்தம் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2-ம் கட்ட தேர்தல்

403 தொகுதிகளைக் கொண்டஉத்தரபிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா,படாவுன், பரெய்லி மற்றும் ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான், மாநில அமைச்சர் சுரேஷ் கண்ணா (பாஜக) உட்பட 586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். சமாஜ்வாதி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு மிகுந்த பகுதியாக இது கருதப்படுகிறது. கடந்த 2017 தேர்தலில் இப்பகுதியில் உள்ள55-ல் 38 தொகுதிகளில் பாஜகவும், 15-ல் சமாஜ்வாதியும், 2-ல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.

உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பதற்றமானவை என கண்டறியப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள், விவிபாட் கருவிகள் உள்ளிட்டவை அனைத்து மையங்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. உத்தரபிரதேசம், கோவாவில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. மலைகள் நிறைந்த உத்தராகண்டில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x