சீக்கியர்களுக்கு தலைப்பாகை போல: ஹிஜாப் அணிவது அவசியம் இல்லை: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கருத்து

ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்
Updated on
1 min read

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு தலைப்பாகை அணிவது அவசியம் என்பதைப் போல இஸ்லாமில் ஹிஜாப் அத்தியாவசியமல்ல என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முஸ்லிம் மதத் தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஹிஜாப் ஆடை அணிந்துவர தடை விதிக்கப்பட்டது. பள்ளி சீருடை அணிந்துவர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறு கிறது. இதையடுத்து, முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத் தினர். இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வந்தனர். இது கர்நாடகாவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஹிஜாப் இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கமல்ல. ஹிஜாப் என்ற வார்த்தை 7 முறை மட்டுமே குரானில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் உடை ரீதியிலான கோணத்தில் கூறப்படவில்லை. இஸ்லாமிய பெண்களின் கல்வியையும் அவர்களின் முன்னேற்றத்தையும் தடுக்கவே ஹிஜாப் விவகாரத்தை சர்ச்சையாக்க சதி நடக்கிறது. நீங்கள் எந்த உடையை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் நீங்கள் ஒரு நிறுவனத்தில் சேரும்போது அங்குள்ள விதிமுறைகள் மற்றும் உடை விதிகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் அந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால் நீங்கள் வேறு நிறுவனங்களுக்கு செல்ல உங்களுக்கு சுதந்திரம் உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் சீக்கிய மாணவர்கள் டர்பன் அணிய அனுமதிப்பதையும் அதேபோல முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறுவது மிகவும் அபத்தமானது. தலைப்பாகை சீக்கிய மதத்தின் முக்கிய அங்கம் ஆகும். ஆனால் ஹிஜாப் என்பது பெண்களின் உடை என குரானில் குறிப்பிடப்படவில்லை. சீக்கியர்களுக்கு தலைப்பாகை போல இஸ்லாமில் ஹிஜாப் அத்தியாவசியமானதல்ல. முஸ்லிம் பெண்கள் இப்போது படித்துதாங்கள் விரும்புவதை சாதிக்கின்றனர். அவர்கள் கல்வியை தடுக்க சதி நடக்கிறது. மாணவ, மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குத் திரும்பி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in