

ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே முச்சிந்தல் சின்ன ஜீயர் ஆசிரமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 120 கிலோ எடையுள்ள தங்க ராமானுஜர் சிலையை நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஹைதராபாத் நகரின் அருகில் முச்சிந்தல் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் வைணவ ஆச்சாரியார் ராமானுஜருக்கு சின்ன ஜீயர் சுவாமிகள் ரூ.1,000 கோடியில் 216 அடியில் ஐம்பொன்னாலான பிரம்மாண்ட சமத்துவ சிலையை நிறுவியதோடு, அங்கு 108 வைணவ திவ்ய தேச சன்னதிகளையும் அமைத்துள்ளார்.
ராமானுஜரின் 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை தொடர்ந்து, அவருக்கு 216 அடி உயர ஐம்பொன் சிலையை கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுடமை ஆக்கினார். பிரதமரைத் தொடர்ந்து, ராமானுஜர் சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கைய்ய நாயுடு, ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கண்டு தங்களது வியப்பை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2-ம் தேதி முதல் 14-ம்தேதி வரை சின்ன ஜீயர் ஆசிர மத்தில் லட்சுமி நாராயண ஹோமம் நடைபெற்று வருகிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று உலக நன்மைக்காக ஹோம பூஜைகள் செய்து வருகின்றனர். நாட்டுடமை ஆக்கப்பட்ட பின்னர் ராமானுஜர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது துணைவியாருடன் தனிவிமானம் மூலம் நேற்று ஹைதராபாத் வந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் பல உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசு தலைவர், ராமானுஜர் சிலை அமைந்துள்ள சின்ன ஜீயர் ஆசிரமம் அமைந்துள்ள முச்சிந்தலுக்கு சென்றார். அங்கு அவரை பூரண கும்ப மரியாதையுடன் சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் வேத பண்டிதர்கள் வரவேற்றனர். அதன் பின்னர், 216 அடி உயர ராமானுஜரின் சிலையை குடியரசு தலைவர் பார்வையிட்டார்.
பின்னர், 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜருக்கு அதன் நினைவாக 120 கிலோ தங்க சிலையை திறந்து வைத்து நாட்டுடமை ஆக்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். இதனை தொடர்ந்து அவர், அங்கு கட்டப்பட்டுள்ள 108 வைணவ திவ்ய தேச கோயில்களை பார்வையிட்டார். பிறகு அவர் பேசியதாவது:
மகான் ராமானுஜரின் தங்க சிலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது என்னுடைய பாக்கியமாகும். ராமானுஜரின் போதனைகள் சாஸ்திரங்களுக்கு மட்டுமே அடங்கி விடாமல், இந்தியர்களின் பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ராம் நகர் பெயரில் உள்ள இந்த நிலம் ஓர் உண்மையான சமத்துவ நிலமாகும். தென்னிந்தியாவில் ராமானுஜர் தொடங்கி வைத்த சமத்துவ போராட்டம் வட இந்தியாவிலும் பரவியது. டாக்டர் அம்பேத்கார் கூட ராமானுஜரின் சமத்துவ போராட்டமே தன்னை ஊக்குவித்தது என குறிப்பிட் டுள்ளார்.
ஆழ்வார்களின் முக்கியத் துவத்தை ராமானுஜர் உலகிற்கு எடுத்துரைத்தார். மகாத்மா காந்தியும் ராமானுஜரை பின்பற்றி வாழ்ந்துள்ளார். நாட்டில் புது சரிதம் தொடங்கி உள்ளது. கடவுளை வணங்க அனைவருக்கும் தகுதி உள்ளது.
இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் பேசினார்.
அதன் பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் தம்பதியினர் ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத் ராஜ்பவனுக்கு சென்றனர். அங்கு இரவு தங்கி, இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.