Published : 14 Feb 2022 06:50 AM
Last Updated : 14 Feb 2022 06:50 AM
கோட்காபுரா: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பு வகித்தது. காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அமரீந்தருக்கும் கருத்து மோதல் முற்றியது. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமரீந்தர் சிங் விலகினார். அதன்பின், பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி) என்ற பெயரில் புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கினார்.
தற்போது பஞ்சாபில் வரும் 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், பாஜக.வுடன் பிஎல்சி கட்சி கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில், பஞ்சாபின் கோட்காபுரா பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா பேசியதாவது:
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சி நிலவியது. டெல்லியில் இருந்து பஞ்சாப் காங்கிரஸ் அரசை சில காலம் பாஜக இயக்கி வந்தது. இந்த ரகசிய கூட்டணி தற்போது பொதுவெளிக்கு வந்துவிட்டது. அதனால் அமரீந்தர் சிங்கை மாற்றி வேண்டியதாகியது.
டெல்லியில் இருந்து மற்றொருவர் (ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்) வந்திருக்கிறார். ‘டெல்லி மாடல்’ போல் பஞ்சாபை மாற்றுவோம் என்கின்றனர். எனவே, இதுபோன்றவர்கள் சொல்லும் பொய்களை பொதுமக்கள் நம்பிவிடக் கூடாது. இதுபோல்தான் குஜராத் மாடல் என்று சொல்லி சொல்லி, கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதுபோன்ற பேச்சுகளை மக்கள் நம்பக் கூடாது.
இவ்வாறு பிரியங்கா காந்தி வதேரா பேசினார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT