

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறி்த்து விளக்கம் கோரி அனுப்பப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய மாவட்டம் பிரிக்கப்படும் என அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் அவருக்கு விதிமீறல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீஸுக்கு மேற்கு வங்க தலைமைச் செயலாளர் வாசுதேவ் பானர்ஜி, மம்தாவுக்கு பதிலாக விளக்கமளித்திருந்தார். இதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில்தான் மம்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. முதல்வர் என்ற முறையில் அல்ல. அவர்தான் பதிலளிக்க வேண்டும். 22-ம் தேதிக்குள் மம்தா பதிலளிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு மம்தா பதிலளித்துள்ளார்.
“மம்தாவின் விளக்கம் கிடைத்துள்ளது. அதனைப் பரிசீலித்து வருகிறோம்” என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதைக் குறிப்பிட்டு மற்றொரு பிரச்சாரத்தில் பேசிய மம்தா, “நான் வங்காள புத்தாண்டு தினத்தில் குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்காக எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதை நான் மீண்டும் சொல்வேன். ஆயிரம் முறை சொல்வேன்” எனத் தெரிவித்துள்ளார்