

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நேற்று புதிதாக மோதல்கள் வெடித்ததால் 3 மணி நேரத்துக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத் தில் உள்ள ஹந்த்வாராவில் பள்ளி மாணவியை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மானபங்கப்படுத்த முயற்சித்ததாக எழுந்த புகாரை அடுத்து, உள்ளூர் மக்கள் ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கு தல் நடத்துவது உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து பாதுகாப்பு படையி னர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் குப்வாராவின் ஹந்த் வாரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ளது. ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால் கடந்த ஞாயிறன்று வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் நடமாட வசதியாக நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டன. மொபைல், இணையதள சேவைகளும் மீண்டும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் ஹந்த்வாரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி களில் நேற்று புதிதாக மோதல்கள் வெடித்ததால், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப் பட்டன.
மாநில முதல்வர் மெகபூபா முப்தி கூறியதாவது: ஹந்த்வாரா சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறை சம்பவங்களால் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. எனவே இளைஞர்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அமைதி நிலவினால் வளர்ச்சி, மகிழ்ச்சி ஏற்படும். சுற்றுலாவாசிகளும் மீண்டும் காஷ்மீருக்கு வரத் தொடங்குவர். இதனால் உள்ளூர் மக்களுக்கு தான் நன்மை ஏற்படும். இவ்வாறு மெகபூபா கூறினார்.
துணை முதல்வர் நிர்மல் சிங் கூறுகையில், ‘‘குப்வாரா, ஹந்த்வாரா பகுதிகளில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் மிகப் பெரிய சதிச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. தேச விரோத மற்றும் மக்கள் விரோத சக்திகள்தான், இந்த சதியின் பின்னணியில் உள்ளன. எனவே மக்கள் அமைதி காக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.