Last Updated : 13 Feb, 2022 12:49 PM

 

Published : 13 Feb 2022 12:49 PM
Last Updated : 13 Feb 2022 12:49 PM

கோவாவில் நாளை தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

பனாஜி: சின்னஞ்சிறிய மாநிலமான கோவாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு, பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவா தேர்தலில் மொத்தம் 11.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 2997 பேர் உள்ளனர். 41 பேர் பாலியல் தொழிலாளர்கள் ஆவர். 9 பேர் திருநங்கைகள் உள்ளனர்.

கோவா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரம் செய்தன.

கிறிஸ்தவர் வாக்கு

2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றது. ஆனால் மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. கோவா சட்டப்பேரவையில் 40 உறுப்பினர்களில் பாஜகவுக்கு தற்போது 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ( 3 எம்எல்ஏக்கள்) , கோவா பார்வர்டு கட்சி (3 எம்எல்ஏக்கள்) மற்றும் மூன்று சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸுக்கு 15 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கோவாவில் முதல் முறையாக இந்த தேர்தலில் 12 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேர்தலில், 6 கத்தோலிக்கர்கள் பாஜக சார்பில் போட்டியிட்டு அனைவரும் வெற்றி பெற்றனர். அதன்பிறகு கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 7 கத்தோலிக்கர்கள் போட்டியிட்டனர். அனைவருமே வெற்றி பெற்று எம்எல்ஏ ஆயினர்.

கோவாவில் பாஜகவுக்கு 3.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் 18 சதவீதம் பேர் கத்தோலிக்கர்கள் என்றும் இந்துக்கள் 66 சதவீதம் என்றும் அந்த அடிப்படையில் வேட்பாளர் பட்டியலில் கிறிஸ்தவர்களுக்கு அக்கட்சி முன்னுரிமை வழங்கியதாக தெரிவித்தது.

பனாஜி தொகுதி

மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் தனது தந்தையின் பாரம்பரியமான பனாஜி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பனாஜி சட்டப்பேரவைத் தொகுதியில் அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகினார்.

பனாஜி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் டர்ன்கோட் அடானாசியோ பாபுஷ் மான்செரேட்டை பாஜக நிறுத்தியுள்ளது. அவர் 2019 இல் காங்கிரஸில் இருந்து மற்ற ஒன்பது எம்எல்ஏக்களுடன் பாஜகவில் சேர்ந்தார்.

கோவாவின் தேர்தல் அரசியலில் பனாஜி தொகுதிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. பனாஜி தொகுதியில் வென்ற மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் மூன்று முறை மாநில முதல்வராக இருந்துள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு

கோவா தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகக்கூடும் எனவும் சில கணிப்புகள் கூறுகின்றன. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றை இலக்கத்திலேயே இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆம் ஆத்மியை விட காங்கிரஸுக்கு குறைவான இடங்கள் கிடைக்கும் ஒரு சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கோவா மாநிலத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தீவிர பிரச்சாரம்

கோவாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் கோவாவில் பிரச்சாரம் செய்தனர்.

கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கரும் வாக்காளர்களுக்கு வீடியோ செய்தியை வெளியிட்டார். கடந்த காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த பணிகளை அவர் நினைவு கூர்ந்தார்.

பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸி் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் தாங்கள் மேற்கொண்ட பல்வேறு பணிகளை எடுத்துரைத்து வீடியோ செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x