Published : 11 Feb 2022 04:39 PM
Last Updated : 11 Feb 2022 04:39 PM

’’வறுமையை வெறும் மனநிலை என்றவர்தானே!” - மாநிலங்களவையில் ராகுல் காந்தி மீது நிர்மலா சீதாராமன் விளாசல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பெயரை நேரடியாகச் சுட்டிக்காட்டாமல் கடுமையாக விமர்சித்துள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2022-23 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் ஏழை மக்களைப் புறக்கணித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடிய நிலையில், மாநிலங்களவையில் இன்று பதிலுரை ஆற்றிய நிர்மலா சீதாராமன், 2013-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பேசியதை மேற்கோள் காட்டினார். அவர் பேசும்போது, "உங்களுடைய முன்னாள் தலைவர் இதே அவையில் 2013-ல் பேசும்போது வறுமை என்பது உணவு, பணம், பொருட்களின் பற்றாக்குறை அல்ல. அது ஒரு மனநிலை. ஒருவருக்கு தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் அவர் ஏழ்மையை வெல்லலாம் என்று பேசியவர்தான். அவரது பெயரை நான் இங்கு குறிப்பிடவில்லை. இந்த வறுமையைப் பற்றிதான் உங்களின் எம்.பி. இப்போது பேசினாரா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ராகு காலம், அமிர்த காலம் பற்றி ஒப்பிட்டுப் பேசினார். இந்து சாஸ்திரத்தில் ராகு காலம் என்பது மோசமான நேரம். அமிர்த காலம் என்பது நல்ல நேரம். பாஜக ஆட்சியில் 100-வது சுதந்திர தினத்தில் இந்தியா என்ற கொள்கையுடன் திட்டங்கள் வகுக்கக்கப்படுகின்றன. அதனால் இது அமிர்தகாலம். இந்தியாவின் ராகு காலம், காங்கிரஸ் ஆட்சி காலம். பிரதமர் மோடி விவசாயிகளுக்காக வேளாண் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதன் நகல்களை எதிர்க்கட்சியினர் கிழித்தெரிந்ததுதான் ராகு காலம்.

உத்தரப் பிரதேச பிரச்சாரத்தில் பெண் சக்தி பெரும் போராட்ட சக்தி என்கின்றனர். ராஜஸ்தானில் அவர்கள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பேச்சுரிமை இல்லை" என்றார் நிர்மலா சீதாராமன்.

'மோடி அரசுக்கு ராகுல் மீது பயம்'... - நிதியமைச்சரின் இந்த உரை குறித்து மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. சக்திசின் கோஹில் கூறும்போது, "மோடி அரசுக்கு ராகுல் காந்தி மீது பயம் உள்ளது. அதனால்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், ஏதேதோ பேசியுள்ளார். அவர் கோபத்தில் பேசியுள்ளார். பொருளாதாரச் சீர்கேட்டால் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்றுள்ளதைக் குறிப்பிட்டு நாங்கள் பதில் கோரியுள்ளோம். ஆனால் அவர் சம்பந்தமில்லாமல் பேசுகிறார். விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, கரோனா பிரச்சினை பற்றி நாங்கள் பேசியுள்ளோம். ஆனால் அவர் அவற்றிற்கு பதிலளிக்கவில்லையே" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x