Published : 11 Feb 2022 05:26 AM
Last Updated : 11 Feb 2022 05:26 AM

முதல்கட்டமாக 58 தொகுதிகளில் அமைதியாக நடந்த தேர்தல்; உ.பி.யில் 60.17% வாக்குகள் பதிவு: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு நேற்று முதல்கட்ட தேர்தல் நடந்தது. மதுராவில் பிருந்தாவன் என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.படம்: பிடிஐ

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 58 தொகுதிகளில் நேற்று அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் சராசரியாக 60.17 சதவீத வாக்குகள் பதிவாகின.

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்.10-ம் தேதி (நேற்று) முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆளும் கட்சி யான பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் முக்கிய போட்டி நிலவுகிறது.

பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய அமைச்சர்கள், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலை வருமான மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செய லாளர் பிரியங்கா காந்தி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அதிகாலையில் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக, பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் வந்தன. உடனடியாக அங்கு மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்ததாக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பி.டி.ராம் திவாரி தெரிவித்தார்.

முதல்கட்டத் தேர்தல் நடந்த 58 தொகுதிகளில் மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 60.17 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு, பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது.

யோகி ஆதித்யநாத் நன்றி

முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளதற்கு வாக்காளர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘தேர்தல் நடந்த அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்துள்ளது. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் வாக்குகள் புதிய உத்தர பிரதேசத்துக்கான அடித்தளமாக அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட தேர்தல் நடந்த 58 தொகுதிகளில் 9 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கான தனித் தொகுதிகள். உ.பி.யின் மேற்கு பகுதியில் உள்ள இந்த 11 மாவட்டங்களில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்த சமூகத்தினர் டெல்லியில் கடந்த ஆண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாட் சமூகத்தினரிடையே கணிசமான ஆதரவை பெற்ற ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியுடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதனால், முதல்கட்ட தேர்தல் நடந்த தொகுதிகள் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 2-ம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு வரும் 14-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மார்ச் 7-ம் தேதியுடன் 7 கட்ட தேர்தல்கள் நிறைவடை கின்றன. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.

மணிப்பூரில் தேதி மாற்றம்

மணிப்பூரில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முதல்கட்டமாக பிப்ரவரி 27-ம் தேதியும் இரண்டாவது கட்டமாக மார்ச் 3-ம் தேதியும் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27-ம் தேதிக்கு பதிலாக 28-ம் தேதியும் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3-ம் தேதிக்கு பதிலாக 5-ம் தேதியும் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மத உணர்வுகள், நம்பிக்கை களுடன் தொடர்புடையதாக இருப்பதால் கிறிஸ்தவ அமைப்பு களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் தேதி மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x