

புதுடெல்லி: உ.பி.யில் நேற்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மீரட்டிலும் தேர்தல் நடைபெற்றது. இதன் ஒரு தொகுதியாக உள்ள அஸ்தினாபூர், மகாபாரதத்தில் கவுரவர்கள் தலைநகராக இருந் ததாக குறிப்புகள் உள்ளன. அஸ்தினாபூர் தொகுதியில் வெல்லும் கட்சியே உ.பி.யில் ஆட்சி அமைக்கும் என்பது இப்பகுதியினரின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கு உதாரணமாக 1957 முதல் 2017 வரை நடைபெற்ற தேர்தல்களை கூறுகின்றனர்.
கடந்த 1957-ல் காங்கிரஸ் வேட்பாளர் பிஷாம்பாய் சிங், வெற்றி பெற்றார். அந்த ஆண்டு முதல் இந்த தொகுதியை தன்வசம் வைத்திருந்த காங்கிரஸ் உ.பி.யில் ஆட்சி செய்தது. அதுவரை தனித்தொகுதியாகவும் இருந்த அஸ்தினாபூர், 1967-ல் பொது தொகுதியானது. இதன்பின், பாரதிய கிஸான் தளம் கட்சியை துவக்கிய சவுத்ரி சரண் சிங்கின் வேட்பாளர் ஆஷாராம் இந்துவிடம் காங்கிரஸ் தோற்றது. இதனால், 1967 மற்றும் 1969-ல் உ.பி. முதல்வரானார் சரண்சிங்.
பிறகு மீண்டும் 1974 மற்றும் 1976-ல் காங்கிரஸின் ரேவதி ராமன் மவுரியா அஸ்தினாபூரில் வென்றார். இந்த சமயங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் முதல்வராக அமர்ந்தனர். இந்த ரேவதி ராமன்,1977-ல் ஜனதா கட்சி சார்பில் அஸ்தினாபூரில் வெல்ல அப்போது, அக்கட்சி சார்பில் முதல்வரானார் ராம் நரேஷ் யாதவ். 1980-ல் ஜாகர்சிங் என்பவர் இந்திரா காங்கிரஸில் வென்றதால் அப்போது அக்கட்சி யில் இருந்த விஸ்வநாத் பிரதாப் சிங் முதல்வரானார். 1985-ல் காங்கிரஸின் ஹர்ஷரண்சிங் அஸ்தினாபூரில் வெல்ல, என்.டி.திவாரி முதல்வரானார்.
1989-ல் முதல்வராக முலாயம் சிங் பதவி ஏற்றபோது அவர் இருந்த சோஷலிச ஜனதா தளம் சார்பில் ஜனத்சிங் என்பவர் அஸ்தினாபூர் எம்எல்ஏ.வாகி இருந்தார். இடையில் 2 முறை அஸ்தினாபூரில் தேர்தல் நடைபெறாமல், 1996-ல் நடை பெற்றது. அப்போது பகுஜன் சமாஜ் வேட்பாளர் அத்துல் கத்திக் வென்று மாயாவதி முதல்வரானார். சமாஜ்வாதி வேட்பாளர் பிரபு தயாள் வால் மீகி 2002-ல் அஸ்தினாபூரில் வெல்ல, முலாயம் சிங் மீண்டும் முதல்வரானார். 2007-ல் பகுஜன் சமாஜின் யோகேஷ் வர்மா, அஸ்தினாபூரில் வென்றார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி முதல்வராக அமர்ந்தார்.
அதன்பிறகு 2012-ல் சமாஜ்வாதி வேட்பாளர் பிரபு தயாள் வால்மீகி மீண்டும் வென்றார். அப்போது,முதல் முறையாக சமாஜ்வாதி சார்பில் முதல்வரானார் அகிலேஷ் சிங். 2017-ல் பாஜகவின் வேட்பாளருக்கு அஸ்தினாபூரில் வெற்றி கிடைக்க, அக்கட்சியின் ஆட்சி உ.பி.யில் அமைந்தது. இந்த தேர்தலிலும் அஸ்தினாபூர் வேட்பாளர்களின் வெற்றி உ.பி.வாசிகளால், கூர்ந்து கவனிக்கப்படுகிறது.