

மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
உணவுப் பாதுகாப்புச் சட்டம் கடந்த 2013 ஜூலை 5-ம் தேதி அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் அதை நடை முறைப்படுத்த வேண்டும். ஆனால் 24 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
எனவே இச் சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத் தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இப்போதைய நிலையில் ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே உணவுப் பாதுகாப்புச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, இமாசலப் பிரதேசம், கர்நாடகம், சண்டீகர், மத்தியப் பிரதேசம், பிஹாரில் பகுதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி யுள்ளேன். இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படாது.
இவ்வாறு ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.