Last Updated : 10 Feb, 2022 08:07 AM

 

Published : 10 Feb 2022 08:07 AM
Last Updated : 10 Feb 2022 08:07 AM

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு: கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்

பெங்களூரு: நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை க‌ர்நாடக உயர் நீதிமன்ற தனிநீதிபதி, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

கர்நாடக மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஹிஜாப் (முக்காடு), புர்கா (முழு நீள உடை) அணிந்து வந்த முஸ்லிம் மாணவி களுக்கு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், ''திருக்குரானில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என கூறப் பட்டுள்ளது. ஹிஜாப் அணிவது மத ரீதியான விதிகளில் முக்கிய மானது. ஏற்கெனவே புட்டசாமி தொடர்பான வழக்கில் உடை அணிவது தனிநபர் உரிமை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதேபோல அரசியலமைப்பு சட்டத்திலும் உடையை தேர்வு செய்யும் உரிமை வழங்கப் பட்டுள்ளது. இதற்கு அரசு பொதுவான‌ உத்தரவை விதித்து தடை செய்ய முடியாது. சீருடை நிறத்திலேயே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும்''என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழ‌க்கறிஞர் பிரபுலிங் நவடகி, ‘‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமையில் வருமா? என ஆராய வேண்டும். கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் சீருடையை தேர்வு செய்யலாம். இந்த விவகாரத்தால் கர்நாடகாவில் உள்ள பல கல்லூரிகள் போராட்ட களமாக மாறியுள்ளன. எனவே, இந்த மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்''என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் நேற்றைய விசாரணையின்போது,'' இது மிகவும் உணர்வுபூர்வமான வழக்கு. அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் இதில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. எனவே கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன். அதனால் இடைக்கால உத்தரவையும் பிறப் பிக்கவில்லை. இவ்வழக்கில் தீர்ப்பு வரும் வரை அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்''என்றார்.

இதனிடையே, முஸ்லிம் மாணவிகளுக்கு ஆஜரானால் வீட்டை முற்றுகையிடுவோம் என்று மூத்தவழக்கறிஞர் தேவதத் காமத்துக்கு பாஜக, ஏபிவிபி, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்தனர். ஆனால், எந்த வழக்கிலும் வாதாடுவேன் என்று காமத் பதில் அளித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போராட்டம் நடத்த‌ தடை

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் (முக்காடு), புர்கா (முழு நீள உடை) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் நடத்திய காவி துண்டு போராட்டத்தால் ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக அரசு வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

இந்நிலையில் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பந்த், '' பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதன்படி கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தை சுற்றி 200 மீட்டருக்குள் கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 22-ம் தேதிவரை அமலில் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x